இரவு நேர ஊரடங்கு: பின்னலாடை நிறுவனங்கள் கடுமையாக பாதிப்பு

திருப்பூர்: திருப்பூரில் 24 மணி நேரமும் இயங்கும் பின்னலாடை நிறுவனங்கள் தற்போது இரவு நேர ஊரடங்கால் 30 சதவீதம் அளவுக்கு உற்பத்தி குறையும் என்று தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்றிலிருந்து அமலாக கூடிய இரவு நேர ஊரடங்கால் இந்த பின்னலாடை தொழில் எந்த அளவிற்கு பாதிக்கப்பட உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த பின்னலாடை தொழில் வருடத்திற்கு ரூ.26,000 கோடி உள்நாட்டு ஏற்றுமதி கொடுப்பதாக உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் வடமாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று, அதன் காரணமாக ஒருசில மாநிலங்களில் போடப்பட்டுள்ள முழு முடக்கம் காரணமாக பின்னலாடை தொழில் பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ளது.

வட இந்தியாவில் டெல்லி, மஹாராஷ்டிரா மாநிலங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த முறை கொரோனா முழு முடக்கத்தின் போது இங்கிருந்து பதிவு செய்யப்பட்டு அனுப்பும் பொருட்கள் லாரி மூலம் அல்லது மற்ற வழிகளில் அனுப்பும் பொருட்களை அங்கிருந்து டெலிவரி எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. கடைகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. அதனால் இந்த முறை முன்னாடியே தேவைகளுக்கு ஆர்டர் கொடுக்கக்கூடியவர்கள் நிறுத்தி கொண்டுள்ளனர். ஆர்டர் கொடுத்தவர்களும் இங்கிருந்து டெலிவரி எடுப்பதை 15 முதல் 30 நாட்கள் கழித்து எடுத்து கொள்ளலாம் என தள்ளிப்போடுகின்றனர். இதனால் புதிய ஆர்டர்கள் பாதிக்கப்பட கூடிய நிலையில் தான் பின்னலாடை தொழில் உள்ளது.

3 ஷிப்டுகளாக இயங்கும் பின்னலாடை நிறுவனங்கள் தற்போது 2 ஷிப்டுகளாக இயங்க உள்ளன. இரவு நேர ஊரடங்கால் 20-30% உற்பத்தி பாதிக்கப்படுவதாக பின்னலாடை நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளன. வட மாநிலங்களில் பொது முடக்கத்தால் திருப்பூரில் ரூ.500 கோடி அளவிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. முழு ஊரடங்கு அச்சம் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்கின்றனர். 24 மணி நேரமும் இயங்கும் பின்னலாடை நிறுவனங்கள், இரவு நேர ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Related Stories: