1 கிலோ தக்காளி வேணுமா ? அப்ப கொரோனா தடுப்பூசி போடுங்க... மூக்குத்தி, சோப்பு, ஜூஸ்-ஐ தொடர்ந்து கவர்ச்சிகரமான அறிவிப்புகள்!!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் தக்காளியை இலவசமாக தந்து கொரோனா தடுப்பூசி போட மக்களை அழைக்கின்றனர். ஒரு பக்கம் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருந்தாலும், அதற்கான தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டி கொண்டு தான் இருக்கின்றனர். மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் கையாண்டு வந்தாலும், சில கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகளை சொல்லி மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள சில அமைப்புகள் முயன்று வருகின்றனர்.

அந்த வகையில்,  குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நகை தயாரிக்கும் பொற்கொல்லர் சமூகத்தை சேர்ந்த அமைப்பினர் சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்தனர். அதாவது அவர்கள் அமைத்துள்ள கொரோனா தடுப்பூசி மையத்துக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு மூக்குத்தியும், ஆண்களுக்கு பரிசு பொருட்களையும் வழங்கி வருகின்றனர். இந்த நடவடிக்கை நாடளவில் பெரும் கவனத்தை பெற்று வருகிறது. தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மும்பை தாராவி மக்களுக்கு இலவசமாக சோப்பு, ஜூஸ் வழங்கப்படுகிறது.

அந்த வரிசையில்,  சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வித்தியாசமான சலுகையை வழங்கியுள்ளது மாநகராட்சி நிர்வாகம் . அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் அனைவருக்கும் ஒரு கிலோ தக்காளி இலவசம் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு மக்களிடையே வரவேற்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.மக்களுக்கு தருவதற்கு போதிய அளவில் தக்காளிகளை வியாபாரிகள் மாநகராட்சிக்கு தரவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: