நாட்டில் 2-வது அலை கொரோனா பரவல் தீவிரம்: தடுப்பூசி தட்டுப்பாட்டால் அல்லல்படும் இந்தியா

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் முடிவுக்கு வருவதாக அனைவரும் நம்பி கொண்டிருந்த சூழ்நிலையில் 2-வது கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த மாதம் தொடர்ச்சியில் நாடு கொரோனா தொற்றின் இறுதி கட்டத்தில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியிருந்தார். அவரது அறிவிப்பை உறுதி படுத்தும் வகையில் தினசரி பாதிப்பும் 11,000--க்கும் கீழ் குறைந்து வந்தது. தடுப்பூசி வந்துவிட்டது, கொரோனாவில் ஓராண்டு கால கோரத்தாண்டவம் முடிவுக்கு வருகிறது என நம்பிக்கை துளிர்விட்டிருந்த சமயத்தில் ஒரே மாதத்தில் 2-அலை கொரோனா பரவ தொடங்கியதில் பேரிடியாக அமைந்துள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.

அதை தொடர்ந்து நடந்த பரப்புரைகளில் முகக்கவசம், தனிமனித இடைவெளி, இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். குஜராத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு ஒன்றரை லட்சம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.மதம் சார்ந்த விழாக்களாலும், கொரோனா தீவிரம் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது என்று நம்ப தொடங்கிய மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை கைவிட்டதும், கொரோனா தீவிரமடைய காரணமாகி உள்ளது. இரண்டாவது அலை தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம் ஆனால் இந்தியா அதை ஒத்திவைப்பது அதனை தாமதப்படுத்துவது மற்றும் அதன் தாக்கத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கி இருக்கலாம் என பரவலாக கருத்து எழுந்துள்ளது.  

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 2.70 லட்சத்தை தாண்டியது. தினசரி கொரோனா மரணங்களும் 1,600-ஐ தாண்டின. ஜூன் முதல் வாரத்துக்குள் நாட்டில் தினசரி கொரோனா மரணங்கள் 2,300-ஐ தாண்டும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதனால் கடந்த ஆண்டை விட படுக்கைகள் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு கடுமையாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி மக்களின் அச்சத்தை மட்டுமின்றி தொற்று பரவலின் வீரியத்தையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் தடுப்பூசி திட்டத்திற்காக மத்திய அரசு அறிவித்த 900 கோடி ரூபாய் கோவிஷீல்டு, கோவாக்சின் நிறுவனங்களுக்கு முறையாக சென்று சேராததே இந்த நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்தியா கொரோனா தடுப்பூசி தயாரிப்பின் கேந்திரமாக இருந்தாலும் பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் கடந்த ஆண்டில் தொடக்கத்தில் இருந்தே கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொண்டது. ஆனால் வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் தீவிரம் காட்டி வந்த மத்திய அரசு 2-வது அலை கொரோனா பரவலுக்கு பின்பே விழித்துக்கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் வரும் செப்டம்பருக்குள் 66 கோடி கொரோனா தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் மந்தை எதிர்ப்பு சக்தி நோய் வந்துவிட்டதாக பெரும்பாலானோர் நம்பிக்கொண்டிருந்த நிலையில் 2-வது அலை கொரோனா பரவல் எப்போது கட்டுக்குள் வரும் என்பதே தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

Related Stories: