நைட்டிக்கு தடா! ஆந்திராவில் விநோத கிராமம்

நன்றி குங்குமம் தோழி

நைட்டி  என்பது  இரவு உடை என்ற நிலையிலிருந்து விடுதலை பெற்று பல காலம் ஆகி விட்டது. இந்தியாவில்   பல பெண்களுக்கு நைட்டி தான்  முழு நேர உடை. தனது குழந்தையை பள்ளிக்கு அழைத்து செல்வதாகட்டும், அருகேயுள்ள கடைக்கு செல்வதாகட்டும் நைட்டியில் தான் செல்கிறார்கள்.  புடவை, சுடிதார் என்ற பெண்களின் பாரம்பரிய உடைகளின் இடத்தை பெருமளவு ஆக்கிரமித்து விட்டது இந்த நைட்டி.

இந்த உடைக்கு கிராமம், நகரம், மாநகரம் என எதுவும் விதிவிலக்கல்ல. ஆந்திராவைச் சேர்ந்த கடற்கரையோர கிராமத்தில் பகலில் நைட்டி அணிய  தடை விதித்துள்ளது அந்த ஊர் பஞ்சாயத்து. மேற்கு கோதாவரி மாவட்டம் டோகலாபள்ளி கிராமத்தில் இந்த புது கட்டுப்பாடு பெண்களுக்கு  விதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சாதி அமைப்பு நடத்தும் பஞ்சாயத்து கூட்டத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதன் படி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பெண்கள் நைட்டி அணியக்கூடாது என தண்டோரா போட்டு சமீபத்தில் பஞ்சாயத்து  நிர்வாகத்தினர் உத்தரவிட்டனர். மீறி நைட்டி அணிந்து வந்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளனர். விதியை மீறி பெண்கள்  யாராவது நைட்டி அணிந்திருப்பதை பார்த்து பஞ்சாயத்தாரிடம் தெரிவித்தால் செய்தி அளித்த நபருக்கு ரூ.1000 அன்பளிப்பு வழங்குவதாகவும்  தண்டோராவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நைட்டி தேசிய உடையாக மாறிவிட்டது. அதனால் பெண்கள் எந்த உடை அணியவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க யார் இவர்கள் என போர்க்  கொடி ஏற்ற வேண்டும் என்றும் தோன்றுகிறதா? உங்களுக்கு ஒரு தகவல். இந்த உத்தரவை அந்த ஊர் பெண்களில் ஒருவர் கூட எதிர்க்கவில்லை  என்பது தான் ஹைலைட்.  இதற்கு அந்த பஞ்சாயத்தார் தரும் விளக்கம் சிந்திக்க வைக்கிறது.  ‘‘பகலில் நைட்டி அணிவது தேவையற்ற சிக்கல்கள்  மற்றும் அவமானங்களுக்கு காரணமாகிறது.

ஆண்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. எனவே பகலில் பெண்கள் நைட்டி அணிந்தபடி பொது இடங்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தான்  இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது’’ என்று கூறுகின்றனர். இரவில் நைட்டி அணிய தடை இல்லை. இந்த ஊரில் மதுக்கடை திறக்க அரசு அனுமதி  வழங்கிய நிலையில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு இதுவரை மதுக்கடை திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.                     

கோமதி பாஸ்கரன்

Related Stories: