கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம்!: நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு..!!

சென்னை: அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த வியாழக்கிழமை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து கடந்த 16ம் தேதி நெஞ்சுவலி காரணமாக நடிகர் விவேக் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அன்றைய தினம் அவரது உடல்நலம் விசாரிக்க சென்ற நடிகர் மன்சூர் அலிகான், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் விவேக்குக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டார். மேலும் கொரோனா தொற்று என்பதே இல்லை என்றும் கொரோனா தடுப்பூசிகள் குறித்தும் தவறான கருத்துக்களை கூறினார். குறிப்பாக அரசுக்கு எதிராக அவதூறாக பேசி இருந்தார். கொரோனா தடுப்பூசி குறித்து மன்சூர் அலிகான் பேசிய காட்சிகள் சமூக வலைதளங்கள் மூலம் வேகமாக பரவியது.

மக்களிடையே விவேக் மரணம் குறித்து தவறான தகவல் பரப்பி வரும் நடிகர் மன்சூர் அலிகான் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி பொது அமைதியை சீர்குலைப்பது, தொற்று நோய் பரப்பும் தீய எண்ணத்தூடு செயல்படுத்துவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>