அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுன்டர்கள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அனைத்து தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுன்டர்கள் அமைத்து அவர்களுக்கு முன்னுரிமை வழங்க  வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதில் பல்வேறு சவால்களை  எதிர்கொள்ளும் மாற்றுத் திறனாளிகளையும் தடுப்பூசி செலுத்தும் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க உத்தரவிடக் கோரி சமூகநீதி முன்னேற்றத்துக்கான  மையத்தின் இணை நிறுவனர் மீனாட்சி பாலசுப்பிரமணியன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்க முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று  மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகளை முன்னுரிமை பட்டியலில் சேர்ப்பது  தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்துக்கு இதுவரை பதில் இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து தடுப்பூசி  மையங்களிலும் சிறப்பு கவுன்டர்கள் அமைக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 45 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கு தான் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதால், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க உத்தரவிட வேண்டும்  என்று கோரினார்.

இந்த வாதங்களை ஏற்ற நீதிபதிகள், அனைத்து தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுன்டர்கள் அமைத்து, அவர்களுக்கு  முன்னுரிமை வழங்க வேண்டும். சிறப்பு கவுன்டர்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் சாய்தள பாதை உள்ளிட்ட வசதிகளை  ஏற்படுத்த வேண்டும். அதேபோல, 18 வயதுக்கு மேல் 45 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி போடுவதால் ஏதேனும் எதிர்விளைவுகள் ஏற்படுமா  என்று மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் கலந்து பேசி மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பை நிர்ணயிப்பது குறித்து 3 நாட்களில் முடிவெடுக்க  வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories:

>