கண்ணூரில் இருந்து சென்னை வந்தபோது மாஸ்க் அணிய மறுத்து விமானத்தில் தகராறு: கேரள பயணி போலீசில் ஒப்படைப்பு

சென்னை: கண்ணூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் மாஸ்க் அணிய மறுத்த பயணி, விமான பணிப்பெண்களிடம் வாக்குவாதம் செய்தார்.  தீவிர விசாரணைக்கு பிறகு அவருக்கு 200 அபராதம் விதிக்கப்பட்டு, கடுமையான எச்சரிக்கைக்கு பின் அனுப்பி வைக்கப்பட்டார். கேரள மாநிலம்  கண்ணூரில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வந்து கொண்டிருந்தது. விமானத்தில் 49  பயணிகள் இருந்தனர். கொரோனா 2வது அலை மிகவேகமாக பரவுவதால், பயணிகள் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்ற  விதிமுறை அமலில் உள்ளது.

ஆனால், கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த இன்ஜினியர் பிரதீப் குமார் (46) மாஸ்க் அணி யாமல் இருந்துள்ளார். அவரை மாஸ்க் அணியும்படி  விமான பணிப்பெண்கள் கூறியும் மறுத்து விட்டார். சக பயணிகள் கூறியும் கேட்கவில்லை. இதையடுத்து விமான கேப்டனிடம் விமான  பணிப்பெண்கள் புகார் செய்தனர். உடனே சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விமானம் இரவு 11.30 மணிக்கு  சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்திற்குள் சென்று,  பிரதீப்குமாரிடம் விசாரித்தனர். ஆனால், அவர் முறையாக பதில் கூறவில்லை. இதனால், பிரதீப்குமாரை கீழே இறக்கிய இண்டிகோ ஏர்லைன்ஸ்  பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பிறகு, 200 அபராதம் விதிக்கப்பட்டு  கடும் எச்சரிக்கைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.

Related Stories: