கொரோனா ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து சென்னை முழுவதும் இன்று முதல் 200 இடங்களில் வாகன சோதனை: போலீஸ் கமிஷனர் தகவல்

சென்னை: கொரோனா ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து சென்னை முழுவதும் இன்று முதல் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும், என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

புளியந்தோப்பு காவல் சரகத்துக்குட்பட்ட செம்பியம் காவலர் குடியிருப்பில் காவலர் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி முகாமை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அனைவரும் முகக்கவசம் அணிவதுடன் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நடைமுறையை கடைபிடிப்பதால் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. நேற்றுகூட கொரோனாவால் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் இறந்துள்ளார். இது வருத்தமளிக்கிறது. இதுவரை சென்னையில் 10 ஆயிரம் காவல்துறையினர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் 12 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 200 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் வாகன சோதனை நடத்தப்பட உள்ளது. தடுப்பூசி குறித்து சமூகவலை தளங்களில் தவறான தகவல் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நடிகர் மன்சூர் அலிகான் மீது பெறப்பட்ட புகாரை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமையில் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும். இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், வடக்கு கூடுதல் ஆணையர் செந்தில்குமார், மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்ேதாப்பு துணை ஆணையர் ராஜேஷ்கண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: