ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை நாடாளுமன்ற அவசர கூட்டத்தைக் கூட்டுங்கள்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. நிலைமை மோசமடைந்து வருவதால், பேரிடரை சமாளிக்கும் தேசிய ரீதியிலான கொள்கையை வகுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனீஷ் திவாரி, ஜனாதிபதிக்கு டிவிட்டரில் கோரிக்கை வைத்துள்ளார். ‘கொரோனா தொற்றில் இந்தியா தற்போது ஆபத்தான கட்டத்தில் உள்ளது. தடுப்பூசி திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. போதுமான ஆக்சிஜன், படுக்கை வசதிகள், உயிர் காக்கும் மருந்துகள் போன்றவை எல்லா இடங்களிலும் பற்றாக்குறையாக உள்ளது. ரோம் எரிந்துகொண்டிருந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனைப் போல, மக்களை காக்க வேண்டிய பாஜ அரசாங்கம் மேற்கு வங்கத்தேர்தலில் பிசியாக உள்ளது.

சூழ்நிலையை சமாளிப்பதற்கு தேசிய ரீதியிலான கொள்கையை வகுக்க வேண்டியது அவசியம். எனவே, ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 2 நாள் நாடாளுமன்ற அவசர கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என மணிஷ் திவாரி கூறியுள்ளார். இதே கோரிக்கையை சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ரவுத்தும் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார். ‘முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனாவுடன் இந்தியா போராடிக் கொண்டுள்ளது. உச்சகட்ட குழப்பமும், பதற்றமும் நிலவி வருவதால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. எனவே, அவசர கூட்டத்தை கூட்டுங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

Related Stories:

>