152 அடி உயரம்... 8 மதகுகள்... ரூ.1000 கோடி செலவில் முல்லைப்பெரியாறில் புதிய அணை திட்ட அறிக்கை பணிகள் தீவிரம்

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தி உள்ளது. முல்லைப்பெரியாறில் தற்போது உள்ள அணை பலவீனமாக இருப்பதாகவும், எந்த நேரத்திலும் உடையலாம் என்றும் கேரள அரசு கூறிவருகிறது. அதே வேளையில் அணை பலமாக இருப்பதாக தமிழகம், உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு தீர்மானித்தது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையே 2வது முறையாக மீண்டும் கேரள அரசு மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தது. இதையடுத்து புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 2011ம் ஆண்டு புதிய அணை கட்ட கேரள அரசு ஒரு திட்ட அறிக்கை தயார் செய்தது.

இதற்காக தற்போது உள்ள அணையில் இருந்து 366 மீட்டர் தொலைவில் புதிய அணைக்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது. இது பாதுகாக்கப்பட்ட பெரியாறு புலிகள் சரணாலய பகுதியாகும். இந்த நிலையில் புதிய அணை கட்ட தமிழகத்திடம் கேரள அரசு அனுமதி கோரியது. ஆனால் அனுமதி வழங்கவில்லை. இதனால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு, புதிய அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை கேரள அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி ரூ.1,000 கோடி செலவில், 4 ஆண்டுகளுக்குள் புதிய அணையை கட்டி முடிக்கவும் தீர்மானித்துள்ளது. இந்த அணையின் உயரம் 152 அடி. முக்கிய அணையில் 8 மதகுகள் அமைக்கப்படுகின்றன. அணையின் பலத்தை அதிகரிக்க, அருகில் ஒரு பேபி அணையும் கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: