தமிழக வட மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்: பகல் நேரத்தில் புழுக்கம் அதிகமாக இருக்கும்; வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டலமேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. அதில் அதிகபட்சமாக நேற்று ராசிபுரத்தில் 30மிமீ மழை பெய்துள்ளது. ஒட்டப்பிடாரம், பெரியாறு 20மிமீ, ஆண்டிப்பட்டி, தக்கலை, சங்ககிரி, தேக்கடி, பெருஞ்சாணி அணை 10 மிமீ மழை பெய்துள்ளது. நீடித்து வரும் வெப்ப சலனம் காரணமாக ஏற்பட்டுள்ள வளி மண்டலமேல் அடுக்கில் உருவாகியுள்ள காற்று சுழற்சியால், நீலகிரி,கோவை, தென்காசி, சிவகங்கை,விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 23ம் தேதி வரை லேசான மழை பெய்யும். இது தவிர சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக வெப்ப நிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். தமிழகம், புதுச்சேரியில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 80 சதவீதம் வரை இருக்கும். அதனால் பிற்பகல் முதல் காலை வரை புழுக்கமாகவும், இயல்புக்கு மாறாக அதிக அளவில் வியர்க்கும்.

Related Stories: