மின் வாகன உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெறும்: நிதின் கட்கரி நம்பிக்கை

புதுடெல்லி: ‘மின்சார வாகன உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியா முதல் இடம் பெறும்’ என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறியதாவது: ஆண்டுதோறும் 8 லட்சம் கோடி மதிப்பில் பெட்ரோலிய பொருட்களை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இது இன்னும் இரண்டு மடங்காக மாறுவதற்கான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. காற்று மாசும் இந்தியாவில் கவலை தரும் வகையில் உள்ளது. இதனால்தான் எத்தனால், மெத்தனால், பயோ ஜிஎன்ஜி, எலக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் பயன்பாட்டுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

குறிப்பாக மின் வாகன பயன்பாடு மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதற்காகவே மின்சார வாகனங்களை பெருமளவில் தயாரிக்கும் முனைப்பில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. அடுத்த 6 மாதங்களில் லித்தியம் அயன் பேட்டரிகள் உற்பத்தி இந்தியாவில் அதிகரிக்கப்படும். இதன்மூலம் மின் வாகன தயாரிப்பு இன்னும் வேகமெடுக்கும். மின் வாகனங்களின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவிலேயே கிடைக்கும். இதன்மூலம் சர்வதேச அளவில் மின் வாகன உற்பத்தியில் இந்தியா முதல் இடம் பெறும். மின் வாகனங்களின் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் மின்சார வாகனங்கள் போட்டி போடும் நிலைமையும் உருவாகும். மேலும் ஹைட்ரஜன் எரிபொருள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இவ்வாறு கூறி உள்ளார்.

Related Stories: