தேர்தல் ஆணையத்துக்கு மம்தா வேண்டுகோள் மீதமுள்ள 3 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: பிரசாரத்தை குறைக்க முடிவு

சகுலியா: ‘கொரோனா தீவிரத்தை கருத்தில் கொண்டு மீதமுள்ள தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது தேர்தல் பிரசாரத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. முதல் 5 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் அடுத்த 3 கட்ட தேர்தல்கள் வரும் 22, 26, 29ம் தேதிகளில் நடக்க உள்ளன. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.

இதில், 6ம் கட்ட தேர்தலுக்காக உத்தர் தினஜ்பூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசுகையில்,‘‘தேர்தல் ஆணையத்தை கைகளை கூப்பி கேட்டுக்கொள்கிறேன். மீதமுள்ள 3 கட்ட தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த வேண்டும். ஒரே நாளில் நடத்த முடியாத நிலையில், இரண்டு நாட்களில் நடந்துங்கள். பாஜ என்ன சொல்கிறதோ, அதன் அடிப்படையில் உங்களது முடிவுகளை எடுக்காதீர்கள். தேர்தல் நடைபெறும் நாளை குறைப்பதன் மூலமாக பொதுமக்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாப்பதை உறுதி செய்யுங்கள். அது ஒரு நாளாக இருந்தாலும் கூட சரி”என்றார்.

இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கு வங்கத்தில் தனது பிரசார கூட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்வதாக நேற்று முன்தினம் அறிவித்து இருந்தார். இதர கட்சி தலைவர்களும் பிரசாரங்களை ரத்து செய்ய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, மம்தாவின் தேர்தல் பிரசாரமும் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரக் ஓ பிரைன் தனது டிவிட்டர் பதிவில்,‘‘8வது கட்டமாக தேர்தல் நடக்கும் கொல்கத்தாவில் 29ம் தேதி நடக்கும் பிரசார கூட்டத்தில் மம்தா பங்கேற்க மாட்டார். பிரசாரத்திற்கு முன்னதாக சம்பிரதாயத்துக்காக நடக்கும் கூட்டத்தில் மட்டும் பங்கேற்கிறார். மேலும் அனைத்து பிரசார கூட்டங்களின் நேரமும் அரைமணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

* பாஜ பேரணியும் குறைப்பு

ராகுல், மம்தாவைத் தொடர்ந்து பாஜவும் தனது பிரசார பேரணியை குறைத்துக் கொள்வதாக நேற்று அறிவித்தது. இனி சிறிய அளவிலான கூட்டங்கள் மட்டுமே நடத்தப்படும் என கூறியுள்ள பாஜ, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கூட அதிகபட்சம் 500 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என அறிவித்துள்ளது. அனைத்து பிரசார கூட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: