தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ‘ஹீரோ’ ரயில்வே ஊழியர்

மும்பை: மும்பையில் ரயில் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு ‘உண்மையான ஹீரோ’ என சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வாங்கனி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை 2வது பிளாட்பாரத்தில் தனது குழந்தையுடன் தாய் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புறநகர் ரயில் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. சில அடி தூரத்தில் ரயில் வந்த நிலையில், நடைமேடையில் இருந்து குழந்தை தவறி தண்டவாளத்தில் விழுந்தது.

அதிர்ச்சியில் செய்வதறியாது தாய் திகைத்து போன நிலையில், அங்கு பாயிண்ட் மேனாக பணியாற்றும் மயூர் ஷெல்கே மின்னல் வேகத்தில் விரைந்து குழந்தையை மேலே தூக்கி விட்டதுடன், ரயில் தன் மீது மோத இருந்த சில வினாடிகளுக்குள் தாவி மேலே ஏறி தப்பித்தார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை மத்திய ரயில்வே டிவிட்டரில் வெளியிட்டு, ரயில்வே ஊழியர் மயூரை பாராட்டி உள்ளது. உயிரை பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய மயூருக்கு தலைவணங்குவதாக கூறி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பலரும் மயூருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories:

>