முத்தம் தரணும்ன்னா என்ன செய்வது? காரில் மாஸ்க் அணியாமல் தகராறு செய்த தம்பதி கைது

புதுடெல்லி: காரில் மாஸ்க் அணியாமல் வந்த தம்பதி போலீசாரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்த விவகாரம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா தீவிரமானதைத் தொடர்ந்து காரில் தனியாக பயணம் செய்பவர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியின் டர்யங்கஞ்ச் பகுதியில் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு காரை மறித்த போது, அதிலிருந்த கணவன், மனைவியான பங்கஜ் குப்தா மற்றும் அபயா குப்தா இருவரும் மாஸ்க் அணியாமல் இருந்தனர். அவர்களை மாஸ்க் அணியும் படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அந்த தம்பதி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரையே மிரட்டும் தொனியில் பேசிய மனைவி அபயா, ‘‘நீங்கள் ஏன் காரை நிறுத்தினீர்கள்? கொரோனா என்ற பெயரில் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். நான் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனது காருக்குள் இருக்கும்போது நான் ஏன் முகக்கவசம் அணிய வேண்டும்? நான் எனது கணவருக்கு முத்தம் கொடுக்க வேண்டுமென்றால் என்ன செய்வது?. நான் என் கணவருக்கு முத்தம் கொடுப்பேன். நீங்கள் தடுத்து நிறுத்துவீர்களோ?’’ என பயங்கரமாக கத்தினார். இதனால், காரில் மாஸ்க் அணியாதது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பங்கஜ், அபயா இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Related Stories: