சீனா உடன் வீண் பேச்சால் தேச பாதுகாப்புக்கு ஆபத்து: ராகுல் காந்தி எச்சரிக்கை

புதுடெல்லி: சீனாவுடன் நடத்திக் கொண்டிருக்கும் வீண் பேச்சுவார்த்தைகளால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார். லடாக் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் தங்களது துருப்புகளை இந்தியாவும், சீனாவும் படிப்படியாக வாபஸ் பெற்று வந்தன. இதனால் ஒரு வருடத்துக்கும் மேலாக எல்லையில் நீடித்து வந்த பதற்றம் தணிந்தது. ஆனாலும், கோக்ரா ஹாட் ஸ்பிரிங் மற்றும் தேஸ்பங் பிளைன் போன்ற இடங்களிலிருந்து சீன ராணுவம் இன்னும் பின் வாங்கவில்லை. இதனால் கடந்த ஏப்ரல் 9ம் தேதியன்று 11வது கட்ட பேச்சுவார்த்தையில் இந்தியாவும் சீனாவும் பங்கேற்றன.

இதில் எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை. ஆக்கிரமிப்புகள் வாபஸ் பெறப்படாததாலும், பேச்சுவார்த்தை பலன் தராதது பற்றியும் ராகுல்காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘சீனாவுடன் நடத்தி வரும் தேவையற்ற பேச்சுக்களால் தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதைவிட தகுதியான முடிவுகள் இந்தியாவுக்கு தேவை. கிழக்கு லடாக்கிலுள்ள ஹாட் ஸ்பிரிங், கோக்ரா மற்றும் தேஸ்பங்க் போன்ற பகுதிகளிலிருந்து தங்களது துருப்புகளை சீனா திரும்பப்பெற்றுக் கொள்ள மறுத்துள்ளது. படைகளைத் திரும்பப் பெறுவது பற்றிய சீனாவுடனான பேச்சுவார்த்தை ஏன் பலன் தரவில்லை என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: