தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர் உடலை மாற்றி கொடுத்த விபரீதம்: உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை

ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இறந்தவரின் உடலை மாற்றிக் கொடுத்ததால், அவரது உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் அய்யாவு (71). மனைவி, 3 பிள்ளைகள் உள்ளனர். அய்யாவு வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் செருப்பு தைத்து வந்தார். கடந்த 16ம் தேதி பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த அவரை போலீசார் மீட்டு, வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அய்யாவு, நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

அய்யாவுவின் உடலை வாங்க மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் நேற்று வந்தனர். ஆனால், பிரேத பரிசோதனைக்கூடத்தில் அவரது உடல் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமு என்பவரின் உடலுக்கு பதிலாக அய்யாவுவின் உடலை மாற்றி அனுப்பி வைத்ததும், அய்யாவுவின் உடலை பெற்றுச் சென்றவர்கள், தகனம் செய்து விட்டதும் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அய்யாவு உறவினர்கள் க.விலக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர்.

அவர்களிடம் ஏடிஎஸ்பி சங்கரன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், அய்யாவுவின் அஸ்தியை உறவினர்கள் பெற்றுக் கொள்வதாகவும், மேலும், இ.புதுக்கோட்டை ராமு உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அய்யாவு உறவினர்கள் கூறுகையில், ‘‘மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் அய்யாவுவின் உடல் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தவறை செய்த மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: