திண்டிவனம் அருகே நள்ளிரவில் அட்டகாசம் 5 வீடுகளில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை: பொதுமக்கள் திரண்டதால் காரை நிறுத்திவிட்டு வடமாநில கும்பல் தப்பி ஓட்டம்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே 4 வீடுகளில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள், 5வது வீட்டில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய போது பொதுமக்கள் திரண்டதால் கொண்டு வந்த கார், திருட்டு பொருட்களை விட்டுவிட்டு தப்பினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் வசிப்பவர் குமார் (29). பள்ளி ஆசிரியர். நேற்று முன்தினம் நள்ளிரவில் இவரது வீட்டுக்கு காரில் வந்த கொள்ளை கும்பல் பைக்கை திருடினர். பின்னர் பக்கத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர் வரதராஜன் (70) வீட்டின் பூட்டை உடைத்து எல்இடி டிவியை திருடினர்.

அடுத்ததாக ஆசிரியர் லோகநாதன் வீட்டிலும் கொள்ளை முயற்சியில்  ஈடுபட்டனர். சத்தம் கேட்டதும் லோகநாதன் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். உடனே மர்ம கும்பல் காரில் தப்பி விட்டது. பின்னர் அந்த கும்பல் கன்னிகாபுரத்தில் விசு (எ) ஞானசேகரன் (60) வீட்டுக்கு கொள்ளையடிக்க சென்றது. கொள்ளையடிக்க முயன்ற போது ஞானசேகரன் சத்தம் போடவே, துப்பாக்கி, கத்தி, இரும்பு ராடு ஆகியவற்றை காட்டி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். ஆனால், அவரது மகன்கள் இருவரும் கூச்சல் போட்டனர். இதனால் கிராம மக்கள் கையில் தடியுடன் திரண்டு கொள்ளையர்களை விரட்டினர்.

இதனால் கும்பல் கார் மற்றும் எல்இடி டிவி ஆகியவற்றை விட்டுவிட்டு தப்பினர். ஒருவன் பைக்கை ஓட்டிச்சென்ற நிலையில் மற்ற 4 பேரும் மாயமாகி விட்டனர். துப்பாக்கியையும் எடுத்துச்சென்று விட்டனர். ஆனால் அதற்குரிய குண்டுகள் காரில் இருந்தன. தகவலறிந்ததும் விழுப்புரம் எஸ்.பி. ராதாகிருஷ்ணன் வந்து பார்வையிட்டு விசாரித்தார். கொள்ளையரின் கார் அரியானா மாநில பதிவு எண் கொண்டது என தெரியவந்துள்ளது. எனவே அவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என தெரிகிறது. இந்நிலையில், மரக்காணம் சாலை, காமராஜர் நகரில் வீடு புகுந்து அருண்குமாரை என்பவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கி, 2 பவுன் தங்கச்செயினை பறித்ததும் தெரியவந்துள்ளது.

Related Stories: