கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோயில் நிலத்தில் கட்டிடப்பணி தொடங்கலாம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கான கட்டிடத்தை கோயில் நிலத்தில் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 34 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுப்பதற்கு அரசுக்கு அனுமதி அளித்த போதும் கலெக்டர் அலுவலகம் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது. அதேபோல, கோயில் நிலத்தை மதிப்பீடு செய்ய, பாரத ஸ்டேட் வங்கி மதிப்பீட்டாளர்கள் மூன்று பேரின் பெயர்களை பரிந்துரைக்க வங்கி துணை பொது மேலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாரத ஸ்டேட் வங்கி பரிந்துரைத்த அதிகாரிகள் பட்டியலில் ஒருவரை தேர்ந்தெடுத்து, கோயில் நிலத்தை மதிப்பீடு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு  உரிய ஒத்துழைப்பு அளிக்க உத்தரவிட்டனர். அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், கோயில் நிலத்தை பயன்படுத்துவதற்கான வாடகை நிர்ணயம் செய்வதில் மட்டுமே தற்போது பிரச்னை நிலவுவதால், ஏற்கனவே கட்டுமான பணிகளை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென்று கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உரிய ஒப்புதல்களை பெற்றபின் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான  பூர்வாங்க பணிகளை  மேற்கொள்ள அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

Related Stories: