சின்னமனூர் அருகே சூறைக்காற்றுடன் கனமழை 50,000 வாழைகள் நாசம்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு 50 ஆயிரம் வாழை, 300 ஏக்கர் முருங்கை, 50 ஏக்கர் அவரைச்செடிகள் நாசமாகின. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை, குச்சனூர், அய்யம்பட்டி கிராமங்களில் செவ்வாழை, நாளிப்பூவன் ஆகிய வாழை ரகங்களை விவசாயிகள் 16 மாதங்களுக்கு முன் பயிரிட்டனர். ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். வாழைகள் குலை தள்ளிய நிலையில் விரைவில் தார் போடும் நிலையில் இருந்தது. நேற்று முன்தினம் மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையால், 3 கிராமங்களிலும் சுமார் 50 ஆயிரம் வாழைகள் ஒடிந்து சாய்ந்தன. இதனால், விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த வாழைகளை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல, இப்பகுதியில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்ட முருங்கை மரங்கள், 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த அவரைச் செடிகள் சூறாவளிக்கு சாய்ந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகள், ‘‘எங்களின் வாழ்வாதாரம் முடங்கிப் போய் உள்ளது. அரசு எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>