தமிழகத்தில் மே 2ம் தேதி ஒரே நேரத்தில் தபால், மின்னணு வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணிக்கு தொடங்கும்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி காலை 8.30 மணிக்கு எண்ணப்படுகிறது. ஒரே நேரத்தில் தபால் வாக்கு  மற்றும் மின்னணு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். குறைந்தபட்சமாக 14 மேஜைகள், அதிகபட்சமாக 30 மேஜைகள் போடப்படும் என்று தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று  நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வருகிற மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதன்படி காலை 8.30 மணிக்கு தபால் வாக்குகள்  எண்ணிக்கை நடைபெறும், அதேநேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும். முன்னதாக 8 மணிக்கு  அனைவரும் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று தயாராக இருப்பார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், கடைசியில் 5  விபிபேட் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, கன்ட்ரோல் யூனிட்டில் பதிவான வாக்குகளும், விவிபேடில் பதிவான வாக்குகளும் சரியான  எண்ணிக்கையில் உள்ளதா என்று பரிசோதிக்கப்படும். அப்போது வேட்பாளர்கள், அப்சர்வர்களும் உடன் இருப்பார்கள்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மட்டும், அந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா 5 விவிபேட் இயந்திரத்தில்  பதிவான வாக்குகள் இறுதியாக எண்ணப்படும். அதேபோன்று, ஒரு சட்டமன்ற தொகுதியில் பதிவான மின்னணு இயந்திரத்தில் வாக்குப்பதிவு விவரம்  வரவில்லை என்றாலும், விவிபேட்-ல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும். ஒரு சட்டமன்ற  தொகுதிக்கு குறைந்தபட்சம் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். சோழிங்கநல்லூர் போன்று பெரிய சட்டமன்ற தொகுதியில் 28 முதல்  30 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

முதல் ரவுண்ட் முடிந்தவுடன், வேட்பாளர்களின் கையெழுத்து வாங்கப்படும். தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி, பொது பார்வையாளர்கள்  கையெழுத்து போடுவார்கள். இதையடுத்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான முடிவை அறிவிக்கும். மின்னணு வாக்கு இயந்திரம்  வைக்கப்பட்டுள்ள ஸ்டாங் ரூமுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் மிக தீவிரமாக  பின்பற்றப்பட்டு வருகிறது. இப்போது கூட, வெளியில் இருந்து ஒரு கன்டெய்னர் வந்தாக அரசியல் கட்சியினர் புகார் அளித்தனர். அதை சோதனை  செய்து பார்த்தபோது,  பெண்கள் டாய்லெட் வேன் என்பது தெரியவந்தது. மூன்று இடங்களில் இது  கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்டாங் ரூமுக்கு அருகில்  இதுபோன்று மர்ம நபர்கள்  நடமாட்டம் இருந்தால் தீவிரமாக கண்காணிக்கப்படும். இது வரைக்கும் ஸ்டாங் ரூமில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை  என விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் மாஸ்க், கிளவுஸ், சானிடைசர் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும். அரசியல்  ஏஜென்ட்கள் உள்ளிட்டவர்கள் வாக்குப்பதிவு மையத்துக்கு வரும்போது மாஸ்க் கண்டிப்பாக அணிந்து கொண்டு வர வேண்டும்.  மாநிலத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அரசுக்கு அனுமதி கொடுத்துள்ளது. அதை வைத்துக்கொண்டு அரசு  நடவடிக்கைகள் எடுக்கலாம். அரசு அறிவித்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பொது பார்வையாளர்கள் வருவார்கள். ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் 115 பொது பார்வையாளர்கள்  மட்டுமே இருந்தனர். தற்போது ஒரு தொகுதிக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கன்னியாகுமரிக்கும் ஒரு பொது  பார்வையாளர் வருவார். இவர்கள் 30ம் தேதி தமிழகம் வந்துவிடுவார்கள். வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி  அளிக்கப்பட்டு வருகிறது.

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தங்கள் செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து வருகிறார்கள். தேர்தல் முடிந்த பிறகுதான்  இதுகுறித்து ஆய்வு செய்யப்படும். தேர்தல் செலவின பார்வையாளர்கள், வேட்பாளர்களின் மாதிரி செலவு கணக்கு வைத்திருப்பார்கள். உணவு, கார்  வாடகை, கொடி என ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு விலை என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதை வைத்து, வேட்பாளர்கள் எவ்வளவு செலவு  செய்துள்ளார் என்று செலவின பார்வையாளர் கணக்கு வைத்திருப்பார். ஒரு வேட்பாளர் ரூ.30.80 லட்சம் செலவு செய்யலாம். அதிகமாக செலவு  செய்திருந்தால் நோட்டீஸ் வழங்கப்படும். ஒரு மாதத்தில் அவர் செலவு செய்ததற்கான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள்  வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை 3 மணிக்கு நடந்தது. இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  பங்கேற்றார்.

கால்குலேட்டர் போன்றது வாக்குப்பதிவு இயந்திரம்

மின்னணு வாக்கு இயந்திரங்களை வைபை உதவியுடன் ஹாக் செய்ய முடியாது. நீதிமன்றத்தில் அவர்களாகவே ஒரு மின்னணு இயந்திரத்தை தயார்  செய்துவிட்டு,  ஒரே கட்சிக்கு வாக்குகள் பதிவானதாக கூறினர். ஆனால் தேர்தல் ஆணையம், தங்களிடம் உள்ள இயந்திரத்தில் எந்த தவறும்  கண்டுபிடிக்க முடியாது என்று  உறுதியாக சொன்னது. தேர்தல் ஆணையம் வாய்ப்பு அளித்தும் யாரும் நேரில் வந்து  மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரத்தில் தவறு செய்ய முடியும் என்பதை நிரூபிக்க  முடியவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கால்குலேட்டர்  மாதிரிதான்.  கால்குலேட்டருக்கு எப்படி சிக்னல் எல்லாம் கொடுக்க முடியாதோ,  அதே மாதிரிதான் மின்னணு இயந்திரம். வெளியில் இருந்து எந்த சிக்னலும்   கொடுக்க முடியாது என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

Related Stories: