கோவை, மதுரை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால் திணறல்: கால்கடுக்க காத்திருந்து செல்லும் மக்கள்: சிறப்பு முகாம்கள் ரத்து

சென்னை: கோவை, மதுரை, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளபட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான தடுப்பூசி பற்றாக்குறை நிலவி  வருகிறது. இதனால் தடுப்பூசி இல்லாமல் சிறப்பு தடுப்பூசி முகாம்களில் மக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். கொரோனா தொற்றுப் பரவல் கடந்த 7  நாட்களில் அதிதீவிரமாக அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் ஏறத்தாழ இரு மடங்காக  அதிகரித்துள்ளது. இதனால், மத்திய அரசால் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள நபர்களுக்குக் கூட தடுப்பூசி செலுத்த முடியாத நிலை உள்ளது. இதற்கு  காரணம், மாநிலம் முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறை மிக அதிக அளவில் இருக்கிறது.

தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் மக்கள், தடுப்பு மருந்துகள் பற்றாக்குறையால் திருப்பி அனுப்பப்படுவதாக  புகார்கள் எழுந்துள்ளன. 8.8 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி இருப்பு உள்ளது என சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று கூறினார். ஆனால்  கடந்த சனிக்கிழமை 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் நேற்று 25,670 பேருக்கு மட்டுமே தடுப்பூசி  செலுத்தப்பட்டது. கோவையில் கடந்த சனிக்கிழமை 7,850 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நேற்று 918 பேருக்கு மட்டுமே போடப்பட்டது. மதுரையில் போதிய தடுப்பூசி டோஸ்கள் இருப்பு இல்லாத காரணத்தால் நேற்று நடைபெற இருந்த பல்வேறு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ரத்து  செய்யப்பட்டது.

மேலும் திருச்சி, சென்னையின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவருவதாக கூறப்படுகிறது. மொத்தம் 10  டோஸ்கள் உள்ள ஒரு மருந்து குப்பியை திறந்தால் 3 முதல் 4 மணிநேரங்களுக்கு அதை முழுவதுமாக பயன்படுத்திவிட வேண்டும். தவறும்  பட்சத்தில் அவை வீணாகிவிடும். அவ்வாறு வீணாவதை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கோயம்பத்தூரில் 9,550 மருந்துகள் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், பல தடுப்பூசி முகாம்களில் தடுப்பு மருந்துகள் இல்லை எனவும் அதிகாரிகள்  கூறுகின்றனர். மதுரை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இதேநிலை தான் என்கின்றனர். அவினாசி, உடுமலைப்பேட்டை, பல்லடம்  பகுதிகளில் தடுப்பு மருந்து பற்றாக்குறையால் பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

Related Stories: