மே 1ம் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கும் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போடலாம் என மத்திய அரசு நேற்று அறிவித்தது. மத்திய அமைச்சர்கள், பிரபல டாக்டர்கள், மருந்து நிறுவனங்களுடன் பிரதமர் மோடி அடுத்தடுத்து நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கிடையே கடந்த 15 நாளில் 25 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 1.50 கோடியை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 2.73 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.  இந்தியாவில் கொரோனா 2வது அலை சுனாமி அலையாக உருவெடுத்துள்ளது. தொடர்ந்து 5வது நாளாக நேற்றும் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை

தாண்டியது. நேற்று ஒரேநாளில் நாடு முழுவதும் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 1 கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த டிசம்பர் 19ம் தேதி மொத்த பாதிப்பு 1 கோடியை தாண்டிய நிலையில், 107 நாட்களுக்கப் பிறகு ஏப்ரல் 5ம் தேதி 1.25 கோடியை எட்டியது. அதன்பின் சூறாவளியாக உருவெடுத்த கொரோனா அலை அடுத்த 15 நாட்களில் 25 லட்சம் அதிகரித்து 1.50 கோடியை எட்டியுள்ளது. அதே போல, கடந்த 24 மணி நேரத்தில் 1,619 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 78 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19 லட்சத்து 29 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது. இதனால், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. நோயாளிகள் படுக்கை வசதி இல்லாமலும், ரெம்டெசிவர் மருந்து, ஆக்சிஜன், வென்டிலேட்டர் தட்டுப்பாட்டாலும் பெரிதும் அவதிப்படுகின்றனர். நிலைமை கைமீறிப் போவதைத் தடுக்க பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. நேற்று காலை அவர் கொரோனா பரவல் தொடர்பாக மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் மாலை 4.30 மணி அளவில், நோய் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரபல மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாலை 6.30 மணி அளவில் தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்கும் வழிமுறை குறித்து பிரபல மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தடுப்பூசி குறித்து தவறாக பரப்படும் செய்திகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி போட ஊக்குவிக்க வேண்டுமென டாக்டர்களிடம் மோடி வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, வரும் மே 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போடலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. முதலில் சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 3ம் கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்காக தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. ஆனால், ஏற்கனவே தற்போது கொரோனா தடுப்பூசிக்கு நாடு முழுவதும் பற்றாக்குறை நிலவி வருகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசி இல்லாமல் தடுப்பூசி போடும் மையங்கள் செயல்படாமல் உள்ளன. எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட குவிந்தால் அரசு எப்படி அதை சமாளிக்கும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

2வது அலையில் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பொது இயக்குநர் பல்ராம் பார்கவா கூறுகையில், ‘‘இறப்பு விஷயத்தில் கொரோனா முதல் அலைக்கும், 2வது அலைக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், 2வது அலையில் ஆக்சிஜன் 54.5 சதவீதம் பேருக்கும் முதல் அலையில் 41.5 சதவீதம் பேருக்கும் தேவைப்பட்டுள்ளது. 70 சதவீதத்திற்கு அதிகமான நோயாளிகள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதிலும் 2 அலையில் வித்தியாசமில்லை. எனவே 2வது அலையில் பயப்பட அவசியமில்லை’’என்றார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவது மாநிலங்களின் கடமை

பல மாநிலங்களில் உயிர்காக்கும் மருத்துவ ஆக்ஸிஜனின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் , மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மாநிலங்களில் ஆக்ஸிஜன் தேவையை மாநிலங்களே கட்டுக்குள்வைத்திருக்க வேண்டும்’’ என அறிவுறுத்தியிருக்கிறார். மாநில அரசுகள் மருத்துவ ஆக்ஸிஜனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தேவைகளை மேலாண்மை செய்வது என்பது விநியோக மேலாண்மையைவிட மிக முக்கியமானது. கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது மாநிலங்களின் மிகப்பெரிய கடமை. அவர்களுடைய பொறுப்பை அவர்கள் முழுதாகச் செய்ய வேண்டும்” என கூறியது சர்ச்சையாகி உள்ளது.

மன்மோகனுக்குதொற்று உறுதி

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்குக்கு (88) நேற்று காலை லேசான காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர் பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். சமீபத்தில் மன்மோகன் சிங் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. மன்மோகன் சிங் விரைவில் குணமடைய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேண்டியுள்ளார்.

டெல்லியில் 6 நாள் முழுஊரடங்கு அமல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வடமாநிலங்களில் ஊரடங்குகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் நேற்று இரவு 10 மணி முதல் 6 நாட்கள் முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும் அவசர நடவடிக்கையாக இந்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, டெல்லி முழுவதும் மதுக்கடைகளில் மது வாங்க மக்கள் நீண்ட வரிசையில் குவிந்தனர். இதே போல உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அம்மாநில அரசு லக்னோ, பிரக்யாராஜ், வாரணாசி, கான்பூர், கோரக்பூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் வரும் 26ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

Related Stories:

>