மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு செய்யும் மருத்துவர்!

நன்றி குங்குமம் தோழி

படித்த பெண்கள் கூட மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனை என்றாலே பயப்படத்தான் செய்கிறார்கள். ஆனால் அது எவ்வளவு அத்தியாவசியமான  தேவை என்பதை பெண்களுக்கு உணர்த்தும் முக்கியமான வேலையை செய்து வருகிறார் டாக்டர் அனிதா பரமசிவன். ஆயிரக்கணக்கான மாணவிகளை,  பெண்களை சந்தித்து மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் இவர்.

“மருத்துவம் முடித்து கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்கேன் நிபுணராக பணிபுரிகிறேன். அடையார் புற்றுநோய் மருத்துவமனையிலும் சில  ஆண்டுகள் பணிபுரிந்தேன். என்னதான் நான் டாக்டராக இருந்தாலும், எனக்கும் குடும்பம், குழந்தைகளை பார்க்க வேண்டும் இல்லையா? அதனால் என்  மகள் வளர்ந்து வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு தான் எனக்கென்று கொஞ்சம் நேரம் கிடைத்தது. இனிமேல் எனக்கென்று பெரிய கமிட்மென்ட்  இல்லாத காரணத்தால், என் மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்ய ஆரம்பித்தேன்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ரோட்டரி கிளப்பில் உறுப்பினராக இருக்கிறேன்.  மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் மிகக்  குறைவாக இருப்பதை உணர்ந்தேன். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இருந்தால் புற்றுநோயின் முதல் கட்டத்திலே கண்டறிந்து அதனை  முழுமையாக குணப்படுத்தி விட முடியும். அதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று விரும்பினேன். ரோட்டரி கிளப் மூலமாக அதனை சிறிய  அளவில் செய்ய ஆரம்பித்தேன்’’ என்றவர் டர்ன்ஸ் பிங்க் அமைப்பின் அம்பாசிடராக உள்ளார்.

‘‘என்னுடைய விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றி கேள்விப்பட்டு, சென்னை டர்ன்ஸ் பிங்க் அமைப்பு  முதலாண்டு பிங்க் அம்பாசிடராக என்னை தேர்ந்தெடுத்  தார்கள். இது மார்பக புற்றுநோய் குறித்து பிரச்சாரம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதனால் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு  ஏற்படுத்துதலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தேன். 2013 -– 2014ல் திருமதி சென்னையாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். பிறகு 2017- 2018ல் திருமதி  இந்தியா வேர்ல்டு போட்டியில் கலந்து கொண்டு முதல் ரன்னர் அப்பாக தேர்வானேன். அந்த போட்டியின் தீம், மார்பக புற்றுநோய்.

என்னுடைய ஏரியா என்பதால், நான் அந்த போட்டியில் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டேன். மேலும் பல தரப்பு பெண்களுக்கு மார்பக புற்றுநோய்  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எனக்கு கிடைத்த பிளாட்பார்ம். அதனால் அது குறித்து ஒரு மைம் தயார் செய்து நடித்தேன். அதற்கு எனக்கு திருமதி  டேலன்ட் என்ற பட்டமும் கிடைத்தது. அதன் பிறகு பல இடங்களில் இது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்றவர்  பெண்கள் கண்டிப்பாக தங்களின் உடல் நலம் குறித்து கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

‘‘குடும்பத்தில் பிள்ளைகளுக்கோ, கணவருக்கோ உடல் நலம் சரியில்லை என்றால் கவனம் எடுத்துக் கொள்ளும் பெண்கள் தங்கள் உடல் நலத்தைப்  பற்றி கவலைப்படுவதில்லை. அப்படிப் பட்டவர்கள் மார்பகத்தில் கட்டி வந்துவிட்டால், அது புற்றுநோயாக இருக்குமோ என பயத்தில் யாரிடமும் அது  பற்றி சொல்வதில்லை. வெட்கம், பயம் போன்ற பல காரணங்களால் தன் குடும்பத்தினரிடம் கூட பகிர்ந்து கொள்ள தயங்குகிறார்கள். அப்படி ஏதாவது  இருந்து விட்டால் தன் வாழ்க்கையே இருண்டு விட்டது போல் நினைத்துக்கொள்கிறார்கள். மார்பக புற்றுநோயை சிகிச்சை மூலம் குணமாக்க முடியும்.

ஆரம்ப கட்டத்தில் தெரிந்தால் சீக்கிரத்தில் குணப்படுத்த முடியும். எந்த நோயும் ஆரம்பத்தில் தெரிந்தால் அதிகம் சிரமம் இருக்காது. அது போல தான்  மார்பக புற்று நோயும். பயப்பட தேவையில்லை. மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள பெண் மருத்துவரை அணுகினால்  முதலில் அவர்கள் பரிசோதனை செய்து பார்ப்பார்கள். தேவைப்பட்டால் ஸ்கேன் அல்லது மேமோகிராம் செய்யலாம். மார்பகத்தில் வரும் எல்லாக்  கட்டிகளும் புற்றுநோய் கட்டியாக தான் இருக்கும் என்றில்லை. அதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதற்காக அவர்கள் கட்டி தானே என்று அலட்சியமாகவும் இருந்து விடக்கூடாது. இதனை பெண்களுக்கு உணர்த்ததான் நிறைய மருத்துவமனைகளுடன்  இணைந்து இலவச விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறேன். இதில் என்ன வருத்தமான விஷயம் என்றால், நாங்கள் பரிசோதனைக்குத் தயாராக  இருந்தும் எதிர்பார்த்த அளவிற்கு பெண்கள் வருவதில்லை. வரும் சில பெண்களையே கூட கையைப் பிடித்து இழுக்காத குறையாகத்தான் அழைத்து  வர வேண்டி இருக்கிறது. படித்த பெண்கள் கூட பரிசோதனைக்கு வர தயங்குகிறார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது.

மருத்துவ பரிசோதனை என்றால் தயங்குகிறார்களே என்று. மார்பக புற்றுநோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? எப்படி சுய பரிசோதனை  செய்து கொள்வது என்பதை செய்து காட்டி விளக்குகிறோம். சுய பரிசோதனை செய்யும் போது ஏதாவது சந்தேகம் வந்தால் பரிசோதனை செய்து  கொள்ளலாம் என்று புரிய வைக்கிறோம். இது குறித்து ஒரு மைம் ஷோ மூலமும் அவர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களுக்கு புரிய வைக்கிறோம்.  மார்பக புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தால் குணப்படுத்திவிட முடியும், அதுவும் ஆரம்ப கட்டமாக இருக்கும் பட்சத்தில் இன்னும் நல்லது என்று  சொல்லி அவர்கள் பயத்தை நீக்க முயற்சிக்கிறோம்.

 மாணவிகளிடம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது அவர்கள் தன் அம்மா மற்றும் உறவுப் பெண்களிடம் இந்த விஷயங்களை கொண்டு  சேர்ப்பார்கள் என்று நம்புகிறோம். இதுவரை 25 கல்லூரிகளுக்கும் மேலாக சென்று மாணவிகளை சந்தித்து பேசி இருக்கிறேன். மேலும் தனியார்  நிறுவனங்களுக்கும் சென்று இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இருப்பினும் பெண்களிடம் இது குறித்து தேவையான அளவு  விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது. ஸ்கேன் என்ற வார்த்தை சொன்னாலே பயப்படுகிறார்கள்.

பெண்களிடம் இது குறித்து இருக்கும் பயத்தை கட்டாயம் உடைக்கணும். இதற்கு நூறு சதவிகிதம் மருத்துவம் இருக்கிறது. விழிப்புணர்வு அதிகமாக  ஏற்படும் போது நூறு சதவிகிதம் மார்பக புற்றுநோயை நம்நாட்டில் இல்லாமல் செய்து விட முடியும். அதற்காக இன்னும் இன்னும் இந்த பணியை  தீவிரமாக செய்ய திட்டமிட்டிருக்கிறேன். என் மருத்துவ பணிக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் இந்த வேலையை கட்டாயம் தொடர்ந்து செய்வேன்.  எங்கள் குடும்பத்தில் பெரும்பாலானோர் மருத்துவராக இருப்பதால் என் பணியை நன்கு புரிந்து கொண்டு எனக்கு மேலும் உதவியாக இருக்கிறார்கள்’’  என்றார் டாக்டர் அனிதா பரமசிவன் .

* 35 வயதை தாண்டிய பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் அபாயம் அதிகம்.

 *மரபு வழியாக பிரச்னை உள்ளவர்களுக்கு (அம்மா, பாட்டி யாருக்காவது மார்பக புற்றுநோய் வந்திருந்தால்) ரிஸ்க் அதிகம்.

அறிகுறிகள்

* மார்பக காம்பிலிருந்து ஏற்படும் கசிவு

* மார்பகத்தின் நிறம் மாற்றம்

* மார்பகத்தில் ஏற்படும் கட்டிகள்

* பொதுவாக ஒரு மார்பகத்திற்கும் இன்னொரு மார்பகத்திற்கும் சிறிய அளவில் மாறுபாடு இருப்பது இயல்பு. அதுவே அளவில் அசாதாரண வேறுபாடு  ஏற்படும் போது கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பிரச்னைகள். வெளியில் தெரிவது கொஞ்சம். உள்ளுக்குள் வைத்து மருகுவது அதிகம். எல்லாவற்றையும்  எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது. அதிலும்  ‘அந்தரங்கம்’ என்றால்... கேட்கவே வேண்டாம். சொன்னால் ‘நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்’  என்ற தயக்கம் ஒருபுறம். மற்றவர்களிடம் சொல்லிவிடுவார்களோ என்ற பயம் மறுபக்கம். இந்நிலை இனி வேண்டாம். ‘அந்தரங்க’ பிரச்னையை  நினைத்து மருகி மருகி உங்கள் வாழ்க்கையை தொலைக்க வேண்டாம்.

நம்பிக்கைக்குரிய தோழியாக, உங்கள் நலம் விரும்பும் உயிராக, பிரச்னையிலிருந்து உங்களை விடுவிக்கும் நட்பாக இதோ ‘குங்குமம் தோழி’ உங்கள்  இரு கரங்களையும் அன்புடன் பற்றிக் கொள்கிறாள். அச்சம் வேண்டாம். நிச்சயம் இவள் ரகசியம் காப்பாள். ஆறுதலாக இருப்பாள். நம்பிக்கை அளிப்பாள்.  காப்பாற்றி கரை சேர்ப்பாள். பாலியல் பிரச்னைகள் தொடங்கி குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் வரை அனைத்துக் குழப்பங்களில் இருந்தும்  உங்களை விடுவிக்க காத்திருக்கிறாள். தயக்கமில்லாமல் உங்கள் கேள்விகளை -

‘என்ன செய்வது தோழி?’

குங்குமம் தோழி,

எண்: 229, கச்சேரி சாலை,

மயிலாப்பூர்,

சென்னை - 600 004

என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என அவசியமில்லை. தேவை பிரச்னைக்கு  தீர்வு தானே தவிர அடையாளங்கள் இல்லையே...கரம் கோர்த்து தலை வருட உங்களுக்காக தோழி காத்திருக்கிறாள்!

ஸ்ரீதேவி மோகன்

Related Stories: