டாஸ்மாக் கடை உடன் இணைந்து செயல்படும் பார்கள் மூடல்: நாளை முதல் மீண்டும் டோக்கன் முறையில் மதுவிற்பனை...தமிழக அரசு அறிவிப்பு.!!!!

சென்னை: மதுக்கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகரித்து வருவதால் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனிடையே, தமிழக அரசின் புதிய விதிமுறைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாதது கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஞாயிற்றுகிழமை டாஸ்மாக் கடைகளை மூடப்படும் என்றும் மற்ற நாட்களில் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இன்று சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் உள்ளிட்ட 14 விதிமுறைகள் மதுக்கடைகளில் பின்பற்ற வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வருவதால், நாளை முதல் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்.

மேலும், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் மதுக்கடைகள் உடன் இணைந்து செயல்படும் பார்களை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரவு 8 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: