கொரோனா தடுப்பூசி தயாரிக்க செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை அனுமதிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்.!!!!

சென்னை: தடுப்பூசி தயாரிப்பில் செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் வரை 47,05,473 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்கள் அதிகளவில் தடுப்பூசி போட்டுக்கொள்வதால், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஏற்ப, தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் 20 லட்சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்ட நிலையில் நேற்று காலை ஐதராபாத்தில் இருந்து 1 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. தேவையான தடுப்பூசிகள் இன்று வந்துவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தடுப்பூசி தயாரிப்பில் செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து டி.கே.ரங்கராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், தொழிற்சாலைக்கு தேவையான நிதியை ஒதுக்கி, தடுப்பூசி தயாரிப்பினை முடுக்கிவிட வலியுறுத்தி, இன்றும் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன்.

தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்தும் அவசர அவசியம் உள்ளது. செங்கல்பட்டில் இருக்கும் இந்துஸ்தான் பயோடெக் என்ற அரசு நிறுவனத்தை இதற்காக பயன்படுத்த மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனால், மத்திய அரசு இது உட்பட 4 பொதுத்துறை நிறுவனங்கள் எதையுமே பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: