மராட்டியத்தில் பிரக் ஃபார்மா கிடங்கில் ரெம்டெசிவிர் மருந்து பதுக்கல்; பதுக்கலுக்கு உதவும் பாஜக: மராட்டிய அரசு பகிரங்க குற்றச்சாட்டு

மும்பை: கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்தை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருக்கும் மருந்து நிறுவனங்களை காப்பாற்ற பாஜக முயற்சி செய்வதாக மராட்டிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. ரெம்டெசிவிர் மருந்து பதுக்கல் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு பாஜகவை சேர்ந்த முன்னால முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மிரட்டல் விடுத்ததற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் விதமாக ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதை தொடர்ந்து ரெம்டெசிவிர்  மருந்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என மராட்டிய அரசு அதிகாரிகள் மருந்து நிறுவனங்களில் சோதனையிட்டு வருகின்றனர். மும்பையில் ரெம்டெசிவிர் மருந்தை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான brucke pharma private limited நிறுவனத்தில் சோதனை செய்த போது 60,000 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பாஜகவினர் அந்த நிறுவனத்துக்கு அடிக்கடி சென்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை மருந்து நிறுவனத்தின் உரிமையாளரை அழைத்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கு வந்த மராட்டிய முன்னாள் முதல்வர் மருந்து நிறுவன உரிமையாளரிடம் விசாரணை நடத்தியது தொடர்பாக கேள்வி எழுப்பியதோடு காவல் அதிகாரிகளுக்கும் மிரட்டல் விடுத்தார். இதை அடுத்து காவல்துறை விசாரணையில் குறுக்கீடு செய்ததாக குற்றம் சாட்டியுள்ள மராட்டிய அரசு உயிர் காக்கும் மருந்துகள் பதுக்கப்படும் விவகாரத்தில் பாரதிய ஜனதாவுக்கு என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பியுள்ளது. காவல்துறை அதிகாரிகளை பட்னாவிஸ் மிரட்டியது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. மராட்டியத்துக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை விநியோகிக்க கூடாது என மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாக மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.

தன் மீதான புகாரை மறுத்துள்ள பட்னாவிஸ், ரெம்டெசிவிர்  மருந்தை மராட்டிய மாநிலத்துக்கு தரும்படி கேட்டுக்கொள்ளவே அந்த நிறுவனத்துக்கு சென்றுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். ஆனால் தேவேந்திர பட்னாவிஸ் ரெம்டெசிவிர் பதுக்கல் காரர்களை பாதுகாக்க முயற்சிப்பதாக கூறியுள்ள மராட்டிய அரசு மருந்துகளை குஜராத் மாநிலத்துக்கு ரகசியமாக கடத்தி செல்ல தேவேந்திர பட்னாவிஸ் திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பட்னாவிஸ்செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலவேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: