கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்..!

மதுரை: கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை  நடத்த உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா என்பது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும். மீனாட்சியம்மன் திருக்கோவில் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகர் எதிர் சேவை, அழகர் ஆற்றில் இறங்குவது உட்பட தொடர்ந்து 15 நாட்கள் இந்த திருவிழா என்பது மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவை காண்பதற்கு உலகம் முழுவதும் இருந்து பகதர்கள் வருவார்கள்.

அதனை கருத்தில் கொண்டு தற்போது கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசின் சார்பாக இந்த விழா என்பது இந்த வருடமும் பக்தர்கள் அனுமதி இன்றி உரிய விதிமுறைகளை பின்பற்றி கோவில் ஊழியர்களுடன் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். மேலும் இந்த திருவாலவாய் பகதர்கள் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக பக்தர்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்கக்கோரி அருண் போத்திராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில்; மதுரை சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன் ஒரு பகுதியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றைக் காரணம் காட்டி திருவிழாக்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மனமகிழ் மன்றங்கள், திரையரங்குகள் போன்றவை 50 சதவிகிதத்துடன் இயங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருவிழாக்களுக்கு மட்டும் முழுமையாகத் தடை விதிப்பது ஏற்கத்தக்கதல்ல. இதன் காரணமாக அதன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பெரும்பாலானவர்கள் ஏமாற்றமடைவார்கள்.

ஆகவே பக்தர்கள் இன்றி, அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்த அனுமதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது; கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை  நடத்த உத்தரவிட முடியாது. கொரோனா தொற்று தீவிரமாக பரவக்கூடிய சூழலில் விழாவை நடத்த எப்படி உத்தரவிட முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து, அவ்விழாவிற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் அருண் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories:

>