குடியாத்தம் நகராட்சியில் பாதுகாப்பு கவசங்கள் இன்றி பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள்-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைக்கு கோரிக்கை

குடியாத்தம் : குடியாத்தம் பகுதியில் பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா  தொற்று 2வது அலை  வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க  மத்திய, மாநில அரசுகள் முகக்கவசம், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை  ஏற்படுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில், குடியாத்தம் நகராட்சி 36 வார்டுகளிலும் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், கழிவுநீர் கால்வாய் தூர்வாருவது, தெருக்களில் உள்ள குப்பைகளை சேகரிப்பது போன்ற பல்வேறு தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு தூய்மை பணிகளில் ஈடுபடும் அவர்களுக்கு கையுறை, காலுறை, முகக்கவசம் போன்ற பாதுகாப்பு கவசம் எதுவுமின்றி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று குடியாத்தம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் நகராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவர்  பாதுகாப்பு கவசமும் இல்லாமல், கைகளாலேயே கழிவுநீர் கால்வாயில் உள்ள கழிவுகளை எடுத்து கொட்டி தூய்மை செய்தார்.

இவர்களுக்கு  தேவையான கவசங்களை அளிக்க வேண்டும் என நகராட்சி தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.  மேலும் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவது தடை செய்யப்பட்ட நிலையிலும், இது போன்ற பணிகளில் ஈடுபடுத்தும் குடியாத்தம் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் பாதுக்காப்பு கவசங்களை தூய்மை பணியாளர்களுக்கு வழங்காமல் மெத்தனம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்தினர் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பு கவசங்களை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: