குடியாத்தம் அடுத்த உள்ளி கிராமத்தில் நடிகர் விவேக் நினைவாக 500 மரக்கன்றுகளை நட்ட கிராம மக்கள்

குடியாத்தம் : குடியாத்தம் அடுத்த உள்ளி கிராமத்தில் நடிகர் விவேக் நினைவாக 500 மரக்கன்றுகளை கிராம மக்கள் நட்டனர்.

திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் நடிப்பின் மூலம் தமிழக மக்களுக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். மேலும், திரையுலகத்தை தாண்டி பொது வாழ்விலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மரக்கன்றுகள் நட வேண்டிய அவசியம் குறித்து தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்காக பிரசாரம் மேற்கொண்டு 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டார். அவரது கனவை நனவாக்கும் வகையில் குடியாத்தம் அடுத்த  உள்ளி கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள் பாலாற்று படுகையில் 500 மரக்கன்றுகளை நட முடிவு செய்தனர்.

தமிழக அரசின் உதவியுடன் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு அக்கிராம மக்கள் பராமரித்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து நடிகர் விவேக் மறைவையொட்டி கூடுதலாக 500 மரக்கன்றுகள் நடும் பணி நேற்று துவங்கியது. இதனை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்கள் மரக்கன்று வைக்க குழிதோண்டி, மரக்கன்று வைத்து, தண்ணீர் விட்டு பராமரித்து வருகின்றனர்.

Related Stories: