ஆரணி நகராட்சியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு-கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க கோரிக்கை

ஆரணி : ஆரணி நகராட்சியில் பல்வேறு இடங்களில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

ஆரணி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்றுவதற்காக நகராட்சி சார்பில் சிமென்ட் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், கால்வாய்கள் தூர்ந்து போயும் உள்ளது. அதேபோல், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது.

குறிப்பாக பாரதியார் தெரு,  சபியுல்லா தெரு, இந்திரா நகர், ஷராப் பஜார், கலாஸ்கார தெரு, தர்மராஜ கோயில் தெரு, விடிஎஸ் தெருக்களில் கால்வாய்கள் சேதடைந்து, பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் பரவும் அச்சத்தில் மக்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆரணி சூரிய குளத்தை தூர்வாரி சீரமைக்க ₹6.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருமலை சமுத்திரம் ஏரியில் இருந்து சூரிய குளத்திற்கு தண்ணீர் கொண்டுவர கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் அடைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் காரணமாக அப்பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால், பாரதியார் தெரு,  என்.எஸ்.நகர்,  பிரகாஷ் நகரில் உள்ள வீடு மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதுடன் சாலைகளில் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

எனவே, ஆரணி நகராட்சியில் கால்வாய்களில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும், சேதமடைந்துள்ள கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கவும், தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், குப்பைகளை சரிவர அகற்றாமல்,  சாலைகளில், பொது இடங்களில் கொட்டி எரிக்கும் நபர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: