அரக்கோணம் சப்-டிவிஷனில் மாஸ்க் அணியாத 600 பேர் மீது வழக்கு-டிஎஸ்பி தகவல்

அரக்கோணம் : ராணிப்பேட்டை மாவட்டத்தில்  பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை வேகமாக வீசி வருகிறது.

கொரோனா  தொற்றிலிருந்து தன்னையும், பிறரையும் பாதுகாக்க மாஸ்க் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் மிக முக்கிய கடமையாக பார்க்கப்படுகிறது. எனினும், ஒரு சிலர் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக சாலைகளில் வலம் வருகிறார்கள்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் மாஸ்க்  அணியாதவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, போலீசாரும் ஆங்காங்கே கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு மாஸ்க் அணியாதவர்களை  மடக்கி பிடித்து வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

மாவட்ட எஸ்பி சிவக்குமார் உத்தரவின்பேரில் பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆங்காங்கே காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அரக்கோணம் போலீஸ் சப்- டிவிஷனில் அரக்கோணம்,தக்கோலம், நெமிலி, காவேரிப்பாக்கம் பாணாவரம், சோளிங்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறை சார்பில்  மாஸ்க் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், மாஸ்க் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில், அரக்கோணத்தில்  டிஎஸ்பி மனோகரன் தலைமையில் டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து நேற்று புதிய பஸ் நிலையம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் அனைவரும் கொரோனா  விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.

கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்யப்பட்டது. பின்னர் டிஎஸ்பி மனோகரன் கூறுகையில், `பொதுமக்கள் அனைவரும் அரசு கூறும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.

வெளியில் செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும். அரக்கோணம் போலீஸ் சப்- டிவிஷன் பகுதியில் மாஸ்க் அணியாதவர்கள் சுமார் 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories:

>