விவசாயிகளுக்கு தரமற்ற உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை-வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

ஜெயங்கொண்டம் : விவசாயிகளுக்கு தரமற்ற உரங்களையும், கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அரியலூர் மாவட்டத்தில் கோடை பயிர் சாகுபடிக்கு தேவையான, 7181.375 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளது. இதில் யூரியா 2023 மெ.டன்கள், டிஏபி 962.375 மெ.டன்கள், பொட்டாஷ் உரங்கள் 1950 மெ.டன்கள், காம்ப்ளக்ஸ் உரம் 1907 மெ.டன்கள் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 339 மெ.டன்கள் இருப்பில் உள்ளது.

நேற்று வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் மற்றும் வேளாண்மை அலுவலர், அரியலூர் சவிதா அதிகாரிகள் உரக்கடைகளை ஆய்வு செய்தனர். அப்போது உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிக பட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விவசாயிகளுக்கு உரிய ரசீதுடன் ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விற்பனை செய்தவுடன் இருப்பு விவரங்களை சரியாக பராமரிக்க வேண்டும். உரம் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை பராமரிக்கப்பட வேண்டும். உர உரிமத்தில் அனுமதி பெறாத உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்யக் கூடாது.

மேலும், உர விற்பனை நிலையங்களில் ஏற்கனவே இருப்பில் உள்ள உரங்களை விவசாயிகள் வாங்கும் போது உர மூட்டைகள் மீது அச்சடிக்கப்பட்டுள்ள விலையை பார்த்து உறுதி செய்த பின்னர் அதற்குரிய தொகையை கொடுத்து உரங்களை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. உர மூட்டைகள் மீது விற்பனை விலை அழித்தல் அல்லது கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்வது மற்றும் தரமற்ற உரங்களை விற்பனை செய்வது ஆகியவை கூடாது.

இதனால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ, உரிய ஆவணங்கள் இன்றி அதிக உரங்கள் விற்றாலோ உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர் வேளாண் இணை இயக்குநர், பழனிசாமி தெரிவித்தார். இது தொடர்பாக, விவசாயிகள், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் அலைபேசி எண் 9487073705 மற்றும் வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) சுப்பரமணியன் அலைபேசி எண் 8072646160 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

Related Stories:

>