விலை குறைவு எதிரொலி தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விடும் விவசாயிகள்

உடுமலை : உடுமலை அருகே தக்காளி பயிரிட்ட விவசாயிகள் விலை கட்டுபடி ஆகாததால் தக்காளிகளை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு வைத்துள்ளனர். ஒரு சிலர் பறிக்கும் கூலித் தொகைக்கு  கூட வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால் பழுத்த தக்காளி மீது உழவு ஓட்டுகின்றனர்.

உடுமலை அருகே குடிமங்கலம் கொங்கல் நகரம் ஜல்லிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பீட்ரூட், தக்காளி, வெங்காயம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

தக்காளிக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நல்ல விலை கிடைத்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதமாகவே மகசூல் அதிகரித்து சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரிக்கத் துவங்கியது. இதனால் சந்தையில் கிலோ 5 ரூபாய் என விற்கப்பட்டது.

தொடர்ந்து ஒரு மாதமாக தக்காளி விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் வியாபாரிகள் விவசாயிகளிடம் 15 கிலோ கொண்ட ஒரு பெட்டியினை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி செல்வதால் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை.

நாளொன்றுக்கு தக்காளி பறிப்பதற்காக தொழிலாளர் ஒருவருக்கு 500 ரூபாய் கூலி வழங்கும் வேளையில் தக்காளி பயிரிட்டு அதற்காக செலவு செய்த பணம் கூட கைக்கு வராத நிலையில் விவசாயிகள் தக்காளிகளை பறிக்க தயங்குகின்றனர்.

கடந்த இரண்டு மூன்று நாட்கள் பெய்த மழையால் தக்காளிகள் செடியிலேயே அழுகி வருகின்றன.வியாபாரிகள் கேட்கும் விலைக்கு கொடுக்க மனமில்லாத விவசாயிகள் அவற்றை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். சிலர் கால்நடைகளுக்கு உணவாக வேண்டுமென தக்காளி பயிரிட்ட தோட்டங்களில் ஆடு மாடுகளை மேய விடுகின்றனர்.

ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்தபோதும் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பலர் இம்முறை சாகுபடி செய்த செலவு கூட மீண்டும் கைக்கு திரும்பாததால் வேதனை அடைந்துள்ளனர்.

Related Stories: