டெல்லியில் இன்று இரவு முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று நேரத்தில் வெளியிடுகிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் இன்று இரவு முதல் அடுத்த திங்கள் கிழமை வரை முழு ஊரடங்கு அறிவிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸின் 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் அபாயகரமான பரவல் காரணமாக தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் நிலைமை மோசமாகி வருகிறது. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர், கர்நாடகா, மத்தியபிரதேசம், கேரளா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் 80 முதல் 82 சதவீத புதிய நோயாளிகள் கொரோனாவால் பாதிப்புக்கு ஆளாகின்றனர். தவிர, அரியானா, பஞ்சாப், தெலங்கானா, உத்தரகாண்ட், ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்தது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்; டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. ஊரடங்கு காரணமாக, அத்தியாவசிய சேவை வழங்கும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. ஆங்காங்கே, தடுப்புகளை அமைத்து, காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அரசின் முன் அனுமதி பெற்ற வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. விதிகளை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை பிடித்து அபராதம் வசூலித்தனர். மேலும், அத்தியாவசியமின்றி திறக்கப்பட்ட கடைகளுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகும் டெல்லியில் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. இதனிடையே டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் அனைத்து நீதிபதிகளும் அந்தந்த நீதிமன்றங்களின் அவசர வழக்குகளை மட்டுமே வீடியோ கான்பரன்சிங் முறை மூலம் எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக டெல்லியில் இன்று இரவு முதல் அடுத்த திங்கள் கிழமை வரை முழு ஊரடங்கு அறிவிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இன்று இரவு முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை வரை ஊரடங்கு விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: