12 நாட்களில் பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பு சூறாவளியாக சுழன்று தாக்கும் கொரோனா....டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் படுமோசம்; 7 ஆயிரம் படுக்கைகள் கேட்டு கெஜ்ரிவால் கடிதம்

புதுடெல்லி: இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் உருமாற்ற கொரோனாவின் தாக்குதல், கடந்த 12 நாட்களில் 8 சதவீதத்தில் இருந்து 18.69 சதவீதமாக 2 மடங்கு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு, பலி எண்ணிக்கை படுமோசமான நிலையை எட்டி வருகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரவ ஆக்சிஜனை ஏற்றி வருவதற்காக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் தாக்கி வரும் உருமாற்ற கொரோனா வைரசின் 2வது அலை, கணிக்க முடியாத அளவுக்கு அதிேவகத்தில் பரவி வருகிறது. இதனால், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் பலி, பாதிப்பு எண்ணிக்கைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. நாட்டில் நேற்றும் தொடர்ந் 4வது நாளாக, பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து, 3 லட்சத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

* நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது.

*  புதிதாக, 1,501 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 150 ஆக உயர்ந்துள்ளது.

*  தற்போது, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 18 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* கடந்த 12 நாட்களுக்கு முன் 8 சதவீதமாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை,  தற்போது 16.69 சதவீதமாக 2 மடங்காக உயர்ந்துள்ளது.

* கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு கடந்த  ஒரே வாரத்தில் மட்டும் 13.54 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம், உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 2வது நாடாக இந்தியா விளங்குகிறது. கொரோனாவின் 2வது அலை மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. இதன் விபரீதம் இப்போது அவர்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது. மத்திய மாநில அரசுகளும், மருத்துவமனைகளையும் கொரோனாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கும், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை சமாளிக்க, மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டை உருவாக்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலமும், உத்தர பிரதேசமும் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது. இதனால், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று எழுதியுள்ள அவசர கடிதத்தில், ‘டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 100க்கும் குறைவான படுக்கைகளே தற்போது காலியாக உள்ளன. தொற்று பரவும் வேகம் 24 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவும் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் அளவில் படுக்கைகளோ, ஆக்சிஜன் வசதிகளை டெல்லியில் இல்லை. எனவே, டெல்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளில் உள்ள 10 ஆயிரம் படுக்கைகளில் உடனடியாக 7 ஆயிரம் படுக்கைகளையும், போதிய ஆக்சிஜனையும் மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல், ரயில்வே அமைச்சகத்துக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை கொடுத்து உதவும்படியும், அவற்றை சாகுர் பஸ்தி, ஆனந்த் விகார் ரயில் நிலையங்களில் வைத்து பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும்படியும் கோரியுள்ளார்.

20 நோயாளிகள் ஓட்டம்

உத்தரகாண்ட் மாநிலம், நரேந்திர நகர் பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 38 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த சனிக்கிழமை இரவில் வழக்கமான சோதனைக்காக மருத்துவர்கள் பார்வையிட சென்றனர். அப்போது, 18 நோயாளிகள் மட்டுமே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மற்ற 20 நோயாளிகள் தப்பிச் சென்று  விட்டு இருந்தனர். இதனால், அவர்கள் மீது தொற்று நோய் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>