ராகுல், மயாங்க் அரை சதம் விளாசல் டெல்லிக்கு 196 ரன் இலக்கு

மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 196 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பன்ட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் டாம் கரனுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் எம்.அஷ்வின் நீக்கப்பட்டு ஜலஜ் சக்சேனா இடம் பெற்றார். பஞ்சாப் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் களமிறங்கினர்.

அபாரமாக விளையாடிய இருவரும் டெல்லி பந்துவீச்சை பதம் பார்த்தனர். பவுண்டரியும், சிக்சருமாக விளாசித் தள்ளிய அகர்வால் 25 பந்தில் அரை சதம் அடித்து மிரட்டினார். ராகுல் - அகர்வால் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 12.4 ஓவரில் 122 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். அகர்வால் 69 ரன் எடுத்து (36 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) மெரிவாலா பந்துவீச்சில் தவான் வசம் பிடிபட்டார். நேற்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடிய ராகுல், பொறுப்புடன் விளையாடி  45 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 61 ரன் (51 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரபாடா வேகத்தில் ஸ்டாய்னிஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடி வீரர் கிறிஸ் கேல் 11 ரன் எடுத்து வோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, நிகோலஸ் பூரன் 9 ரன்னில் பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் தீபக் ஹூடா - ஷாருக் கான் அதிரடியாக ரன் சேர்க்க, பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன் குவித்தது. ஹூடா 22 ரன் (13 பந்து, 2 சிக்சர்), ஷாருக் கான் 15 ரன்னுடன் (5 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் வோக்ஸ், மெரிவாலா, ரபாடா, ஆவேஷ் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 196 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது.

Related Stories: