3.3 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பிறகு லாலுக்கு இன்று விடுதலை வீடு திரும்புவதில் சந்தேகம்: இளையமகன் புதிய தகவல்

டேராடூன்: கால்நடை தீவன ஊழல் 4வது வழக்கிலும் ஜாமீன் அளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்படுகிறார். பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் 1990ம் ஆண்டுகளில் முதல்வராக இருந்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் கொள்முதல் செய்ததில் ரூ.950 கோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் தண்டனை விதிக்கப்பட்ட அவர்,  ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த 4 வழக்குகளில் 3ல் ஏற்கனவே அவருக்கு ஜாமீன்  வழங்கப்பட்டது. தும்கா கருவூலத்தில் இருந்து முறைகேடாக ரூ.3.13 கோடியை எடுத்து கையாடல் செய்த வழக்கில் மட்டும், ஜாமீன் கிடைக்காமல் இருந்தது. இதிலும், ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவர் விடுதலை செய்யப்படவில்லை. இன்று அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார். இருப்பினும், டெல்லி எய்ம்சில் சிகிச்சை பெற்று வருவதால், அவர் வீட்டுக்கு செல்வாரா? என்பதில் சந்தேகம் நிலவியது.

இது பற்றி லாலுவின் இளைய மகனும், மாநில ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘‘எனது தந்தை சர்க்கரை நோய், சிறுநீரக தொற்று, இதய நோய், மூச்சுத் திணறல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, டெல்லி எய்ம்சில் அவருக்கு  சிகிச்சைகள் தொடரும். முழுமையாக குணமான பிறகே, அவர் வீடு திரும்புவார்,’’ என்றார்.

Related Stories: