ஓட்டேரி காவலர் குடியிருப்பில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு யாகம் நடத்திய எஸ்ஐ

பெரம்பூர்: ஓட்டேரி காவலர் குடியிருப்பில் கொரோனாவை கட்டுப்படுத்த உதவி ஆய்வாளர் ஒருவர் சிறப்பு யாகம், பூஜை நடத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 2ம் கட்ட கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கொரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சராசரியாக 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. குறிப்பாக, பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், எச்சில் துப்ப கூடாது, வாகன ஓட்டிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், இதனை மீறும் தனிநபர் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

நோய் தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், நோய் தொற்று உள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கொரோனா பரவலை தடுக்க சிலர் கோயில்களில் சிறப்பு யாகம், பூஜைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், காவலர் குடியிருப்பில் கொரோனா பரவலை தடுக்க போலீஸ் எஸ்ஐ ஒருவர் சிறப்பு யாகம் நடத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட்டாளம் பகுதியில் உள்ள ஓட்டேரி காவலர் குடியிருப்பில் உதவி ஆய்வாளர் ரவிச்செல்வம் ஏற்பாட்டில், ராமானுஜரின் 1004வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், தொற்று பாதித்தவர்கள் விரையில் குணமாகவும் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், சமூக இடைவெளியை கடைபிடித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டனர். கொரோனா பரவலை தடுக்க காவலர் குடியிருப்பில் சிறப்பு யாகம் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: