வெளியுறவுத்துறை அமைச்சக தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய வாலிபர் கைது: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா? போலீஸ் தீவிர விசாரணை

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் துபாய் நாட்டிலிருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நிஜாமுதீன் (31) என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன் துபாய்க்கு வேலைக்கான விசாவில் சென்றிருப்பது தெரியவந்தது. மேலும், அவர் அங்கிருந்து சட்டவிரோதமாக ஏமன் நாட்டுக்கு சென்று, அங்கு சுமார் 6 மாத காலம் தங்கியிருந்துள்ளார். பின்னர் அவர் துபாய் வழியாக நேற்று முன்தினம் இரவு சென்னை வந்திருப்பதாக அவரது பாஸ்போர்ட் பதிவில் குறிப்பிடப்பட்டு இருப்பதை கண்டு குடியுரிமை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், ஏமன் நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர்.

அவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்த வாலிபர்களை கடத்தி சென்று, அங்கு அவர்களுக்கு பயிற்சி அளித்து தீவிரவாதிகளாக மாற்றுவதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஏமன் நாட்டுக்கு இந்தியர்கள் சென்று வருவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது. அதோடு துபாய், சார்ஜா நாடுகளின் வழியே ஏமன் நாட்டுக்கு செல்லும் பயணிகளை விமானத்தில் ஏற்றிச் செல்லக்கூடாது என அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையை மீறி எப்படி ஏமன் நாட்டுக்கு சென்று வந்தார் என குடியுரிமை அதிகாரிகள், தனியறையில் வைத்து நிஜாமுதீனிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில், தான் வேலைக்காக துபாய் சென்றதாகவும், அங்கு சரியான வேலை கிடைக்காததால் ஏமன் நாட்டுக்கு வேலை சென்றதாகவும் நிஜாமுதீன் கூறியிருக்கிறார். அவரது பதிலை அதிகாரிகள் நம்பவில்லை. இதனால் அவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத கும்பலிடம் பயிற்சி பெற ஏமன் நாட்டுக்கு சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும், ஏமன் நாட்டுக்கு நிஜாமுதீன் சென்றதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, அவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத பயிற்சி பெற்றவரா என குடியுரிமை அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து நிஜாமுதீனை மேல்விசாரணை மற்றும் உரிய நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்க குடியுரிமை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Related Stories:

>