மதுரையில் பெரும் பரபரப்பு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள்: நடவடிக்கை கோரி திமுக வேட்பாளர்கள் போராட்டம்

மதுரை: மதுரையில் பாஜ போட்டியிடும் வடக்கு தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குள் இரு மர்மநபர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் மதுரை மருத்துவக்கல்லூரியில் அமைந்துள்ளது. இங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  திமுக சார்பில் தளபதி, பாஜ சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிடும் மதுரை வடக்கு தொகுதி வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை அருகே நேற்று மாலை 2 மர்மநபர்கள் உலவிக்கொண்டிருந்தனர். இதனை திமுக வேட்பாளர்களின் முகவர்கள் கண்டுபிடித்தனர். உடனே அவர்கள் உள்ளூர் போலீசாரிடம் முறையிட, போலீசார் மற்றும் முகவர்கள் அந்த மர்மநபர்களை சுற்றிவளைத்துப் பிடித்து விசாரித்தனர். முதலில் தங்களை எலட்ரீசியன் என்றும் பின்னர் போலீசார் என்றும் மாற்றி மாற்றி பதில் கூறினர்.

தகவல் அறிந்து திமுக வேட்பாளர்கள் தளபதி, சின்னம்மாள், மதிமுக வேட்பாளர் பூமிநாதன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மருத்துவக்கல்லூரி மையத்திற்கு வந்தனர். இதுதொடர்பாக திமுக வேட்பாளர் தளபதி கலெக்டர் அன்பழகனிடம் புகார் கூற, ‘‘தேர்தல் ஆணையம் தான் பணி செய்ய அனுமதி வழங்கியுள்ளது’’ எனக்கூறி செல்போனை கலெக்டர் துண்டித்து விட்டாராம். இச்சம்பவத்தை கண்டித்து, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் உடனடியாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கலெக்டர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வர வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, மதுரை வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமார் மையத்திற்கு வந்தார். அவரிடம் வேட்பாளர்கள் புகார் கூறினர். இதுதொடர்பாக அவர் விசாரணை நடத்தினார். இச்சம்பவத்தால், நேற்றிரவு அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மர்ம நபர்கள் யார்?

பிடிபட்ட 2 பேரில் ஒருவர் கார்த்திக் மற்றொருவர் சுந்தர் என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர் விக்னேஷ் என்பவரது பணியாளர்கள். அடையாள அட்டையும்  ஏதும் இன்றி கடந்த ஒருவாரமாக, இந்த வாக்கு இயந்திர மையத்தின் பாதுகாப்பு அறைக்கு செல்வதும், பின்பகுதியில் உள்ள ஜெனரேட்டர் அறைக்கு செல்வதுமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்றிரவு முதல்  அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பு போட வேண்டுமென  திமுக வேட்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>