கே.கே.நகரில் தாறுமாறாக ஓடிய கார் போதையில் விபத்து தொழிலதிபர் கைது: 2 கார் உட்பட 6 வாகனங்கள் சேதம்

சென்னை: கே.கே.நகரில் குடிபோதையில் தாறுமாறாக காரை இயக்கி, 2 கார் மற்றும் 4 பைக்குகள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தை சேர்ந்தவர் அருண் (33). தொழிலதிபரான இவர், பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கே.கே.நகர் பகுதியில் நேற்று முன்தினம் தொழில் தொடர்பாக வந்துள்ளார். அங்கு நண்பர்களுடன் மதுகுடித்துவிட்டு இரவு வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

 அருண் மதுபோதையில் இருந்ததால் கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. கே.கே.நகர் சிவலிங்கபுரம் அருகே வந்தபோது, சாலையோரம் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த வில்லியம் மற்றும் அவரது மகன் சிறில் ரிச்சர்ட் மீது உரசியபடி சாலையோரம் நின்று இருந்த 2 கார்கள், 4 பைக்குகள் மீது மோதி நின்றது.  இந்த விபத்தில் தந்தை, மகன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் காரை ஓட்டி வந்த தொழிலதிபர் அருணை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

தகவலறிந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் இருந்து அருணை மீட்டனர். விபத்தில் காயமடைந்த வில்லியம் அளித்த புகாரின்படி போலீசார் குடிபோதையில் இருந்த தொழிலதிபர் அருணை கைது செய்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. 

Related Stories:

>