கபசுர குடிநீர் வினியோகம் செய்ய திமுகவுக்கு தேர்தல் அதிகாரி அனுமதி

சென்னை: கொரோனா தொற்று தீவிரத்தை குறைக்கும் வகையில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க திமுகவுக்கு தமிழக தேர்தல் அதிகாரி அனுமதி அளித்து கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசும் சுகாதாரத்துறையும் வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து, பொதுமக்கள் தினமும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். அதே நேரத்தில் பலர் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சித்த மருத்துவ குடிநீரான கபசுர குடிநீர், மற்றும் முகக் கவசம், சானிடைசர் அதனுடன் இணைந்த இதர கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்க அனுமதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் தமிழக தேர்தல் அதிகாரியிடம் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டது. இந்த மனு திமுக ஒருங்கிணைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் சார்பில் கொடுக்கப்பட்டது.

அந்த மனுவின் பேரில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனுமதி அளித்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக சார்பில் வழங்கப்பட்ட கடிதத்தின் பேரில் தமிழக தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்தது. மேலும் இந்திய தேர்தல் ஆணையமும் இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததுடன் விருப்பப்படும் அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதர அமைப்புகளும் கபசுரக்குடிநீர், முகக் கவசம், கையுறைகள், சானிடைசர்கள் உள்ளிட்டவற்றை வினியோகம் செய்ய எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தெரிவித்து அனுமதி அளித்துள்ளது. மேலும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்களில் நடைமுறையில் உள்ள கொரோனா விதிகளை பின்பற்றி நிலையான நிர்வாக விதிகளையும் பின்பற்றி வினியோகம் செய்யலாம் என்றும் அனுமதித்துள்ளது.

Related Stories: