பல மாதங்களாக அகற்றப்படாததால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் குப்பை குவியல்: தொழிலாளர்களுக்கு நோய் பாதிப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சாலை ஓரத்தில் குப்பைகள், கம்பெனி கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால்,  சுகாதார சீர்கேடு உருவாகி தொழிலாளர்கள் நோய்  பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை 1400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறிய, பெரிய கம்பெனிகள் உள்ளன. மேலும், இங்கு 100க்கும் மேற்பட்ட ஏற்றுமதி ஆடை நிறுவனங்கள், சாப்ட்வேர், கால் சென்டர் உள்ளன. இங்கு சென்னை, புறநகர், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் 2லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த தொழிற்பேட்டையில் 100க்கும் மேற்பட்ட  பிரதான சாலைகளும், குறுக்கு சாலைகளும் உள்ளன. இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், கம்பெனி அதிபர்கள், உதிரி பாகங்களை சப்ளை செய்யும் வியாபாரிகளும் சென்று வருகின்றனர். மேலும், இச்சாலையை பயன்படுத்தி கம்பெனிகளுக்கு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து கனரக வாகனங்கள், லாரிகள் மூலம் மூலப்பொருட்கள் ஏற்றி கொண்டு வருகின்றன. இதோடு மட்டுமில்லாமல், இச்சாலை வழியாக கம்பெனிகளில் இருந்து உற்பத்தி செய்த பொருட்களையும் வாகனங்கள் மூலம் வெளி இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

இங்கு குப்பைகளை சரிவர அகற்றுவது கிடையாது. சாலை ஓரங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,  “அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சாலை ஓரங்களை ஆக்கிரமித்து குப்பைகள், கழிவுகள்  கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகள் காற்றில் அவ்வப்போது பறந்து சாலையின் மையப்பகுதிக்கு வருகின்றன. சாலை ஓரத்தில் கிடக்கும் குப்பைகள் பல மாதங்களாக அகற்றப்படாமல் மக்கி தூர்நாற்றம் வீசுகிறது. மேலும், கம்பெனிகளில் இருந்து இயந்திரங்களை துடைத்த ஆயில் துணிகள், கழிவு பொருட்களும் சாலை ஓரத்தில் குப்பைகளுடன் கொட்டப்பட்டு வருகின்றன.

மேலும், இங்குள்ள கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதோடு மட்டுமல்லாமல் கால்வாய்களில் குப்பைகளும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கால்வாய்களில் குப்பைகள் குவிந்து மழை காலத்தில் தண்ணீர் செல்ல முடியவில்லை. ஆண்டுதோறும் பருவ மழையின் போது தண்ணீர் கம்பெனிகளில் புகுந்து விடுவதால்  மூலப்பொருட்கள் வீணாகி விடுகிறது.மேலும் கம்பெனிகளில் பல நாட்கள் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனை அடுத்து, கம்பெனியை உரிமையாளர்கள் பூட்டி விட்டு சென்று விடுகின்றனர்.

இதனால் தொழிலாளர்கள் வேலை இன்றி  அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக சாலைகளில் நடந்து செல்லும் தொழிலாளர்கள், இரு, நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் ஓட்டிகள் சுகாதார சீர்கேட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீர், குவிந்து கிடக்கும் குப்பைகளில் இருந்து கொசுக்கள் ஆயிரக்கணக்கில் உற்பத்தி ஆகி வருகின்றன. இவைகள் கம்பெனிகளுக்குள் படையெடுத்து செல்கின்றன. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களை கொசுக்கள் கடிக்கின்றன. இதனால் தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேற்கண்ட பிரச்சனைகள் குறித்து சமூக நல ஆர்வலர்கள் பல முறை மாநகராட்சி மற்றும் சிட்கோ நிறுவன அதிகாரிகளுக்கு புகார் அளித்து உள்ளனர். இருந்த போதிலும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இனி மேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் சாலை ஓரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்,” என்றனர்.

வழிப்பறி அதிகரிப்பு

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் சரிவர ஈடுபடுவது இல்லை. இதனால் கம்பெனிகளில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் தொழிலாளர்களிடம் தங்க சங்கிலி, செல்போன், பணம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் பறித்து செல்கின்றனர். மேலும், குற்றப்பிரிவில் போலீசார் பற்றாக்குறையால், இரவில் ரோந்து பணியை சரி வர செய்ய முடியவில்லை. எனவே, உயர் அதிகாரிகள் கவனித்து கூடுதல் போலீசாரை நியமித்து குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும்,” என்றனர்.

Related Stories:

>