காட்பாடி அருகே சாம்பிளை வெடித்தபோது பட்டாசு கடையில் பயங்கர தீ தாத்தா, 2 பேரன்கள் கருகி பலி: பொதுமக்கள் அலறி ஓட்டம்; பைக்குகள் எரிந்து நாசம்

கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரியை சேர்ந்தவர் மோகன்(55), இவர் லத்ேதரி பஸ் நிறுத்த பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக பட்டாசு கடை நடத்தி வந்தார். இவரது மகள் திவ்யா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசிக்கிறார். இந்நிலையில் நேற்று மதியம் மோகன் தனது 2 பேரன்களுடன் பட்டாசு கடையில் இருந்தார். அப்போது பட்டாசு வாங்க வந்த ஒருவர், சாம்பிளுக்கு ஒரு பட்டாசை வெடித்து பார்ப்பதாக கூறி, கடை எதிரே பட்டாசை கொளுத்தியுள்ளார். அது வெடித்ததில் கிளம்பிய தீப்பொறி கடைக்குள் விழுந்து தீப்பற்றியது.

இதில் அங்கிருந்த பட்டாசுகள் முழுவதும் வெடித்து சிதறி தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் புகை மண்டலமாக காட்சியளித்தது. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்து கடைக்காரர்கள், பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். வெளியில் நின்ற மோகன், கடைக்குள் இருந்த பேரன்கள் தனுஜ்(8), தேஜாஸ்(6) ஆகியோரை காப்பாற்ற உள்ளே பாய்ந்தார். சிறிது நேரத்தில் 3 பேரும் தீயில் உடல் கருகி பலியாகினர். கடையின் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பைக்குகள், 5 சைக்கிள்கள் மற்றும் 2 குடிநீர் சின்டென்ஸ் டேங்க்குகள் எரிந்து நாசமானது.

தகவல் அறிந்து வந்த காட்பாடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இது குறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். தகவலறிந்து கலெக்டர் சண்முகசுந்தரம், எஸ்பி செல்வகுமார் உள்ளிட்டோர் வந்து விசாரணை நடத்தினர். கடையின் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு, கடை இடிந்து விழும் நிலையில் இருந்ததால் கலெக்டர் உத்தரவின்படி பொக்லைன் இயந்திரம் மூலம் கடை முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: