வேதாரண்யம் அருகே டிராக்டரில் மணல் கடத்தலை தடுத்த போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: டிரைவர் கைது; 4 பேருக்கு வலை

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே, டிராக்டரில் மணல் கடத்தலை தடுத்த போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். இதுெதாடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்தரிபுலம் பகுதியிலிருந்து, அரசு அனுமதியின்றி கலவை மணல், டிராக்டர்களில் கடத்தப்படும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து கரியாப்பட்டினம் பகுதியில் தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மணலுடன் சென்ற டிராக்டரை போலீஸ்காரர் டீன் என்பவர் மறித்து சோதனை நடத்தினார். அப்போது டிராக்டர் டிரைவர் வீரமணி தப்பி ஓடிவிட்டார். நடுரோட்டில் மணல் டிராக்டர் நின்றதால் கரியாப்பட்டினம் காவல் நிலையத்திற்கு போலீஸ்காரர் டீன் டிராக்டரை ஓட்டி வந்தார். அவருடன் மற்றொரு காவலரான வெற்றிவேலும் அமர்ந்து வந்தார். காவல் நிலையம் அருகே டிராக்டர் வந்தபோது, திடீரென 3 பேர் சாலையில் நின்றபடி டிராக்டரை வழிமறித்து கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் டிராக்டர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் டீனுக்கு கால் மற்றும் கையில் தீக்காயம் ஏற்பட்டது. மற்றொரு போலீஸ்காரரான வெற்றிவேலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருவரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கரியாப்பட்டினம் போலீசார், டிராக்டர் உரிமையாளர் சக்தி, டிரைவர் வீரமணி, பெட்ரோல் குண்டு வீசியதாக கோபி, அவரது அண்ணன் கோடிநாதன், கலையரசன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். இந்நிலையில் டிரைவர் வீரமணி (24) நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>