வேக்சின் நோயை குணப்படுத்த அல்ல நோயின் வீரியம் குறைத்து உயிரை காக்க மட்டுமே: டாக்டர் விவேகானந்தன் தகவல்

சென்னை: மயிலாப்பூர் ஸ்ரீவிவேகானந்தா மருத்துவமனை டாக்டர் விவேகானந்தன் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா முதல் அலை வந்த போது மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்வது போன்றவை மூலம் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று கூறினர். ஆனால் தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் என இரண்டு வகையான தடுப்பூசி நமக்கு கிடைத்துள்ளது. எனவே அரசு விதிமுறையின்படி கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. முதல் தடவை கொரோனா பாதிப்பு வந்த போது இருமல், காய்ச்சல், தலைவலி, உணவு சுவையில்லாமல் இருத்தல், வாசனை தன்மை இழத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தது. ஆனால் தற்போது 2வது அலையில் அதைவிட கூடுதலாக பல்வேறு அறிகுறிகள் ஏற்படுகிறது.

தொண்டைவலி, நெஞ்சுவலி, வயிற்றுப் போக்கு, உடல் அசதி, கண் சிவந்து இருத்தல், தோல் அலர்ஜி, விரல்களில் அலர்ஜி ஏற்படுதல் மற்றும் முதல்தடவை வந்தது போல் இருமல், காய்ச்சல், தலைவலி, உணவு சுவை இழத்தல், வாசனை தன்மை இழத்தல் போன்று அறிகுறிகளும் இருக்கும். அவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் கொரோனா தொற்று பாதிப்பு வராது என்பது இல்லை. தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேக்சின் என்பது நோயை குணப்படுத்துவது அல்ல, கொரோனாவின் வீரியத் தன்மையை குறைத்து உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டுமே, தடுப்பூசி போட்டுக்  கொள்வது என்பது வருமுன் காப்பது  நலம் மட்டுமே.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்கவிளைவு ஏற்படுமா என்ற பயம் அனைவருக்கும் இருக்கின்றன. அதனால் தடுப்பூசி போடுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனைப்படி, அரசு விதிமுறையின்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதல் தடவை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அலர்ஜி இருப்பவர்கள், தற்போது கொரோனா நோய் தொற்று உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் போன்றவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளக்கூடாது. கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக ஒன்று சேர்வதை தவிர்த்தால் மட்டுமே நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும். மேலும் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுவதல் போன்ற அரசு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அதேபோன்று முறையான மருந்து வரும் வரை சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>