20 லட்சம் டோஸ் கேட்கப்பட்ட நிலையில் ஒரு லட்சம் தடுப்பூசி வருகை: பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: பொதுமக்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு லட்சம் தடுப்பூசி நேற்று வந்துள்ளது என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் வரை 47,05,473 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாள் ஒன்றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது 5 லட்சம் தடுப்பூசி இருப்பு உள்ளது.

இது மூன்று நாட்களுக்கு போதுமானது ஆகும். மேலும் மத்திய அரசிடம் 20 லட்சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்ட நிலையில் நேற்று 2 லட்சம் தடுப்பூசிகள் வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று காலை ஐதராபாத்தில் இருந்து 1 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. மேலும் தேவையான தடுப்பூசிகள் இன்று வந்துவிடும். அதிக தடுப்பூசிகள் இருப்பு வைக்க முடியாது. இன்னும் 3, 4 நாட்களுக்கு தேவையான அளவில் இருப்பு உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் மத்திய அரசிடம் இருந்து வரவழைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>