×

இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய உத்தரவு

* இரவு 10 மணிக்கு மேல் எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை
* ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு
* சுற்றுலா தலங்கள், கடற்கரை, பூங்காக்களுக்கு செல்ல தடை
* கடைகள் இரவு 9 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு 10 மணிக்கு மேல் அனைத்து வாகனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து சுற்றுலா தலங்கள், கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படலாம் என்று புதிய உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2வது அலையின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் கடந்த 16ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டது. அப்போது, கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக அரசின் ஆலோசகர் க.சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் ஜெகன்நாதன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுவதை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் அமலில் இருந்து வருகிறது. கொரோனா நோய் பரவல் நிலை, தற்போது அதிகரித்து வரும் நிலையிலும், வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளி மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையிலும், கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, தேசியபேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன், சில புதிய கட்டுப்பாடுகளுடன், வருகிற 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 28ம் தேதி அன்று, 13,070 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 17ம் தேதி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 65,635 ஆக உயர்ந்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12ம் தேதி தலைமைச் செயலர், அரசு ஆலோசகர், அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. இருப்பினும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், முதல்வர் இன்று (நேற்று) தனது முகாம் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன், கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கும் 20 ம் தேதி (நாளை) அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது: இரவு நேர ஊரடங்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார், பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.

* தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் மேற்கூறிய காலகட்டத்தில் (இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை) செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது.
* மாநிலங்களுக்கு இடையேயான பொது/தனியார் பேருந்து சேவைகளின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
* எனினும், அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம்/ ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி.) இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
* ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.
* பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
* தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு
* மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது.  இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
* எனினும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை  விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள்  போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளைபொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
* முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஸ்விகி, சுமோட்டோ போன்ற மின் வணிகம் (இ-காமர்ஸ்) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுதிக்கப்படுகின்றது. மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை.
* ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம்.
* தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
* முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.

பொது
* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், மக்களுக்கு அனுமதி இல்லை.
* பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள் (ஷாப்பிங் மால்கள்), அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன், இரவு 9 மணி வரைமட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

* கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு கடந்த 10ம் தேதி முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே குடமுழுக்கு/திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்/இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, கோயில் பணியாளர்கள், கோயில் நிர்வாகத்தினருடன் பொதுமக்கள் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு,  உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.  
* கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, புதிதாக குடமுழுக்கு/ திருவிழாக்கள் நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள், தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

* தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் (ஓட்டல்ஸ்) இணைந்து கோவிட் பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை சுகாதாரத்துறை ஆய்வு செய்து, தேவைப்படும் அனுமதியை வழங்கலாம். இத்தங்கும் விடுதிகளில் பிற வாடிக்கையாளர்களை தங்க வைக்கக்கூடாது.
* நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற திருமண மண்டப நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், மண்டப உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை திரையரங்க நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், திரையரங்க உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
* நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை உணவக/தேநீர் கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

* கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். கொரோனா நோய்த்தொற்று சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வர், நோய்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்கவும், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை ஓரிரு நாட்களில் கண்டறிந்து பரிசோதனை மேற்கொண்டு, அந்தந்த பகுதிகளிலேயே கட்டுப்படுத்தி, நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை முடுக்கி விடவும் உரிய அறிவுரைகளை வழங்கினார். மருத்துவமனைகளில் பிராண வாயு (ஆக்ஸிஜன்) இருப்பை போதுமான அளவு வைக்க, கூடுதலாக தமிழ்நாட்டிலேயே அதன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அதனை உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வரால் தொழிற்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.  

அரசு ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் தான், நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, இந்த நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும். மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள்அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
    
* பத்திரிகைகளுக்கு அனுமதி
தமிழகத்தில் நாளை இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும். ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது பணியாற்றலாம்.

* தியேட்டர்கள் மூடப்படுமா? திரையரங்கு உரிமையாளர்கள் நாளை அவசர கூட்டம்
திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நேற்று அளித்த பேட்டி: இரவு நேர ஊரடங்கு காரணமாக, இனி இரவு நேர சினிமா காட்சி நடத்த முடியாது. ஞாயிற்றுக்கிழமை முழுநேர லாக்டவுன். அன்று திரையரங்குகள் இயங்க முடியாது. இனிமேலும் திரையரங்கு உரிமையாளர்களால் நஷ்டத்தை தாங்க முடியாது. இப்போது வெளியான படங்கள் ஓடி முடிக்கும் வரை காத்திருந்து, பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை லாக்டவுன் தொடரும் வரை மூடிவிடலாமா என்று முடிவு செய்ய, நாளை காலை 11 மணிக்கு தனி செயலி மூலமாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் பங்கேற்கும் அவசர கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

* ஊரடங்கு அறிவிப்பு வாக்கு எண்ணிக்கை நாளுக்கு பொருந்தாது
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நாளை முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மறு உத்தரவு வரும் வரை இந்த புதிய உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாக்கு எண்ணிக்கை அன்றும் முழு ஊரடங்கா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு விளக்கம் அளித்துள்ளார். \”தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு புதிய உத்தரவுகள் ஏப்ரல் 30ம் தேதி வரை மட்டும் தான் பொருந்தும். வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி தான் நடக்கிறது. அதனால் அன்றைய தினத்தில் முழு ஊரடங்கு என்பது பொருந்தாது. வழக்கம் போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்\” என்றார்.

* அரசியல் கட்சியினருக்கு விலக்கா?
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிக்கான பொதுத் தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்தது. இதில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குகள் வருகிற 2ம் தேதி தான் எண்ணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு இடத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் அரசியல் கட்சியினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இவர்கள் இரவு நேரத்தில் வெளியே செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு வேறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்திலும் இவர்கள் அந்த மையங்களுக்கு செல்ல முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், அரசியல் கட்சியினர் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tags : Tamil Nadu government , The night curfew will be in effect from 10 pm to 4 am tomorrow
× RELATED இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு...