தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட இன்ஜினியர், பட்டதாரி சிக்கினர்: 40 சவரன் பறிமுதல்

அம்பத்தூர்: அம்பத்தூர் பகுதியில் நடந்து செல்லும் பெண்களை வழிமறித்து செயின் பறிப்பு சம்பவங்கள் கடந்த 2  மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பகுதி  பொதுமக்கள் சார்பில் அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், சம்பவ இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் சோதனை செய்தபோது, பைக்கில் வந்த இரு வாலிபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அதை வைத்து நடத்தியவிசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் (எ) டேனியல் (31), திருவள்ளூர், அரண்வாயல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (29) ஆகியோர் என தெரியவந்தது.

இதன் பிறகு, தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த இருவரையும் நேற்று முன்தினம்  காலை கைது செய்தனர். பின்னர், போலீசார் அவர்களை அம்பத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், தமிழரசன், மணிவண்ணன் இருவரும் சேர்ந்து அம்பத்தூர், மாங்காடு, திருமுல்லைவாயல், பீர்க்கன்கரணை ஆகிய இடங்களில் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்பு கொண்டனர். இதையடுத்து, அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 40 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொள்ளையன் தமிழரசன், சிவில் இன்ஜினியர் ஆவார். இவர் மீது கொலை, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், மணிகண்டன் பி.காம் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர், மீது பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் தெரியவந்தது. இதன்பிறகு, போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர், போலீசார் அவர்களை அம்பத்தூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>